பதிவு செய்த நாள்
04
டிச
2018
01:12
மீஞ்சூர்: சாலையோரம் அமைந்துள்ள கோவில் குளத்தில், மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளதால், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.மீஞ்சூர் அடுத்த, நந்தியம்பாக்கம் பகுதியில், கொள்ளட்டீ, மீஞ்சூர் செல்லும் சாலையோரம் விநாயகர் கோவில் குளம் உள்ளது.
சில தினங்களுக்கு முன், பெய்த மழையின் மழைநீராலும், குடியிருப்புகளின் கழிவுநீராலும், குளம் நிரம்பி உள்ளது.மழை நீர் மற்றும் கழிவுநீர் சாலை வரை தேங்கியுள்ளதால், இரவு நேரங்களில் வாகனங்கள் செல்லும்போது, நிலை தடுமாறி குளத்தில் விழுவதற்கான வாய்ப்பு உருவாகி வருகிறது. இந்த குளத்தின் அருகில், ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிக்கு வந்துச் செல்லும்போது, மாணவர்கள் குளத்தில் தவறி விழும் சூழல் உள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க, சாலையோர குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கவும், குடியிருப்புகளின் கழிவுநீர், குளத்தில் கலப்பதைத் தடுக்கவும், குப்பைக் கழிவுகளை கொட்டுவதைத் தவிர்க்கவும் வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.