பதிவு செய்த நாள்
13
டிச
2018
03:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, 15ம் நூற்றாண்டு விஜயநகர கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வரலாற்று ஆய்வு நடுவம் சார்பாக, அதன் தலைவர் பிரகாஷ் தலைமையில், தொல்லியல் அறிஞர் சேகர், திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை தலைவர் ஸ்தனிஸ்லாஸ் ஆகியோர், செங்கம் அடுத்த விண்ணவனூரில் உள்ள கல்வெட்டை ஆய்வு செய்தனர். அதில், 1460ம் ஆண்டு, இப்பகுதியை ஆண்ட மானஸ்ரீ வீரபிரதாப அச்சுததேவநாயக்கன் மன்னன், அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணிக்காக, விண்ணவனூர் பகுதியில் சிவாலயம் கட்டி, இதை ஒட்டி எட்டரை ஏக்கர் நிலத்தில் வரும் வருவாயை, கோவிலுக்கு தானமாக அளித்தது தெரியவந்தது. மேலும், கிருஷ்ணதேவராயர் திருவண்ணாமலையை தலைநகரமாக மாற்றி, அருணாசலேஸ்வரர் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தையம், அதை ஒட்டிய ராஜகோபுரம், ஆயிரங்கால் மண்டபம், சிவகங்கை குளம் ஆகியவற்றை ஏற்படுத்தினார். இதை நிர்மானிக்கவும், திருப்பணிக்காகவும், விண்ணவனூர் நிலத்தில் வரும் வருவாயை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, தமிழும், சமஸ்கிருதமும் கலந்த எழுத்தில், 26 வரியில் எழுதப்பட்டுள்ளது. மேலும் வருவாயை சூரியன், சந்திரன் உள்ளவரை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செலுத்த வேண்டும்; கொடுக்காமல் துரோகம் செய்பவர்கள், கங்கை கரையிலே காராம்பசுவை கொன்ற பாவத்திற்கு ஆளாவர் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.