பதிவு செய்த நாள்
13
டிச
2018
05:12
ஆதிசங்கரருக்கு ஒருமுறை உடலை வருத்தும் நோய் உண்டானது. கர்நாடக மாநிலம், கோகர்ணம் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் ஈசனின் ஆணைப்படி, ஜயந்திபுரம் எனும் திருச்செந்தூரை அடைந்து கடலில் நீராடி, செந்திலாண்டவனை தரிசித்து மனமுருகி வேண்டினார் ஆதிசங்கரர். அப்போது, கருவறைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து சென்று முருகப்பெருமானை அடைந்தது. அதை ஓர் அறிகுறியாக எடுத்துக்கொண்டு, அங்கேயே மடைதிறந்த வெள்ளம்போல், ‘சுப்ரமணிய புஜங்கம்’ எனும் புஜங்க விருத்தப் பாடலைகளை இயற்றினார் ஆதிசங்கரர். புஜங்கம் என்றால் பாம்பு, பாம்பு ஊர்ந்து செல்வதைப் போன்று சொற்றொடர்களை அமைத்து இந்த ஞானப்பொக்கிஷத்தை அருளினார் ஆதிசங்கரர். பல்வேறு நோய்களையும் தீவினைகளையும் அகற்றும் சுப்ரமணிய புஜங்கப் பாடல்கள் மகத்துவம் மிகுந்தவை. அதேபோல், தனது நோயை தணித்துக்கொள்ள பன்னீர் இலை விபூதியையும் அணிந்துகொண்டார் ஆதிசங்கரர்.
மேலும், தனது 25-வது பாடலில் இலை விபூதியின் பெருமைகளை ஆதிசங்கரர் பாடி மகிழ்ந்தார். பன்னீர் இலையில் 12 நரம்புகள் இருக்கும். அவை முருகனின் பன்னிரு கரங்கள் என்று போற்றுகிறார். முருகப்பெருமானை வழிபட்ட தேவர்கள், இத்தலத்தில் பன்னீர் மரங்களாகவே நிலைபெற்று வாழ்வதாகவும், அதனால் செந்தூரின் ‘பன்னீர் இலை விபூதி’ பிரசாதம் மிகச் சிறப்பானது என்றும் அவர் வழிகாட்டுகிறார். வேறெங்கும் இல்லாத வகையில், செந்தூரில் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின்போது ஸ்வாமியின் பாதத்தில் வைத்து வழிபட்ட பிறகு, இலை விபூதி வழங்கப்படும். சாந்த குணத்தை அளிக்கும் பன்னீர் இலை விபூதிப் பிரசாதம், மனோவியாதிகளை குணப்படுத்த வல்லது என சித்த நூல்கள் கூறுகின்றன. பன்னீர் இலை விபூதியை, செல்வத்தைச் சேமிப்பது போல பூஜையறையில் சேமித்துவைத்துப் பாதுகாக்க வேண்டும் என்பார்கள். ஆன்மிகப் பெரியோர்கள். பன்னீர் இலை விபூதிப் பிரசாதத்தால் நோய் தீர்ந்த பக்தர்கள், முருகனின் கருணையை எண்ணி வணங்கி, ஆடு, மாடு, சேவல்கள் ஆகியவற்றை காணிக்கையாக அளிப்பதும் உண்டு. செந்தூர் செல்லும் பக்தர்கள் செந்திலாண்டவரை தரிசிப்பதுடன், அவரின் திருவருள் பிரசாதமாம் பன்னீர் இலை விபூதியையும் பெற்று வாருங்கள்; அந்த மாமருந்து உங்களுக்கு மகத்துவங்களை வழங்கும்.