பதிவு செய்த நாள்
13
டிச
2018
05:12
பொதுவாகவே மனிதர்களுக்கு, அவரவர் காரியம் என்றால் அவை அனைத்தும் ஒழுங்காக இருக்க வேண்டும்; கடவுள் காரியம் எனில் அவை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற மனநிலை ஏற்பட்டுவிட்டதாக நினைக்கிறேன். தெய்வங்களைப் பல திருவடிவங்களில் அமைத்து, ஒவ்வொரு தெய்வ வடிவமும் இன்னின்ன தன்மை உடையவை என்று நம் ஆகமங்கள் தெளிவுபடுத்துகின்றன.
பரம்பொருள் ஒன்றே பல உருவங்களை எடுத்து, பக்தர்களுக்கு அருள்வதாகவும் அவை கூறுகின்றன. உங்கள் வீட்டில் பூஜையறை தெற்குப் பார்த்து இருந்தால், தெற்கு நோக்கி வைக்கவேண்டிய உக்கிர தெய்வப் படங்களை வைத்து வழிபடலாம். அத்துடன், அந்த பூஜையறையிலேயே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி மற்ற தெய்வங்களின் படங்களையும் வைக்கலாம். திருவிளக்கையும் அந்தத் திசைகளை நோக்கியவண்ணம் அமைத்து வழிபடலாம்.
அப்படியான வசதியில்லை எனில், சிறிய அளவிலான பூஜையறையை மரத்தில் செய்து கிழக்கு நோக்கி இருக்கும்படி வைத்து, அதில் சிறிய அளவு தெய்வப் படங்களை வைத்து வழிபடலாம். வைரம் சிறியதாக இருந்தாலும், அதன் மதிப்பு அதிகமாக இருப்பதுபோல், சரியான திசையில் சிறிய தெய்வப் படங்களை வைத்து வழிபட்டாலும், முழுமையான பலன்களை நாம் பெறலாம். ஒவ்வொரு திசைக்கும் ஓர் ஆற்றல் உண்டு. எனவே தெய்வ சக்தி ஒவ்வொன்றும் அதற்குரிய திசைகளிலிருந்து அருள்பாலிக்கும் போது மிகுந்த பயன் கிடைக்கும். தெய்வ வழிபாடு என்பது நம் நன்மைக்காகத் தானே தவிர, தெய்வத்துக்கு ஆவது ஒன்றுமில்லை. நாம் செய்யும் யாகங்களினால் இந்திராதி தேவர்கள் மகிழ்ச்சியடைந்து, நமக்கு மழை போன்ற இயற்கை வளங்களை அளிப்பதாகச் சொல்லப்பட்டிருப்பது கூட, நம்முடைய நன்மைக்காகத்தானே தவிர, அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. நாம் எங்கிருந்தாலும் நம்மால் முடிந்த அளவுக்கு நம் முன்னோர்கள் நம்பிக்கையுடனும் பக்தியுடனும் கடைப்பிடித்து வந்த சடங்கு -சம்பிரதாயங்களை விடாமல் கடைப்பிடித்து வருவதே நமக்கு நன்மையை அளிக்கும்.