சபரிமலையில் வருமானம் குறைந்தால் அரசு நிதி தரும்: தேவசம்போர்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2018 12:12
சபரிமலை: சபரிமலையில் வருமானம் குறைந்தால் தேவசம்போர்டுக்கு அரசு நிதி தரும், என்று தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.இது குறித்து அவர் மேலும் கூறிய தாவது:சபரிமலையில் கிடைக்கும் வருமானத்தில் 1200 கோயில்களில் நிர்வாகமும், பூஜையும் நடக்கிறது. 13 ஆயிரம் தேவசம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. சபரிமலை வருமானத்தில் இருந்து மாநில அரசு ஒரு பைசா கூட எடுப்பதில்லை. இதை எல்லாம் தெரிந்தும் சிலர் கேரளாவிலும், வெளி மாநிலங்களிலும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் வருமானம் குறைந்துள்ளது.
உண்மை நிலையை பக்தர்களுக்கு தெரியப்படுத்த வெளி மாநிலங்களில் குருசாமிகளின் கூட்டம் கூட்டப்பட்டு வருகிறது.வருமானம் குறையும் பட்சத்தில் அரசு நிதி தரும் என்று முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துஉள்ளார். மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் குறைபாடுகள் இல்லாத அளவு செய்யப்பட்டு வருகிறது. சபரிமலைக்கு அருகில் உள்ள செங்கன்னூர், பத்தணந்திட்டை, எருமேலி, முண்டக்கயம் ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்குவதற்கான வசதி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.