பதிவு செய்த நாள்
24
டிச
2018
12:12
சென்னை: மார்கழி மாத பவுர்ணமி நாளான நேற்று, திருவாதிரை பண்டிகை கொண்டாடப்படுகிறது. அது, ஆருத்ரா தரிசனம் என, அழைக்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகரில் உள்ள சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசன விழா, விமரிசையாக கொண்டாடப் பட்டது. இந்த வைபவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, நடராஜப் பெருமானின் அருளைப் பெற்றனர். மார்கழி மாதம், தக் ஷிணாயன காலத்தின் கடைசி மாதம். தேவர்களுக்கு, இம்மாதமே அதிகாலைப்பொழுது. அதை, பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர். அக்காலத்தில், நடராஜரை தரிசிக்க, தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம். திருவாதிரை நோன்பு என்பது, திருவாதிரை நட்சத்திரனுடன் கூடிய பவுர்ணமி நாளில், உபவாசம் இருந்து, சிவபெருமானை வழிபடும் நாள்.
திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய, 10 நாட்களில், இறுதி நாளாகவும், மார்கழித் திருவாதிரை அமைகிறது. அந்நாளில், உளுந்து மாவினால் செய்த களி, இறைவனுக்கு படைத்து, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர்; திருவான்மியூர், மருந்தீஸ்வரர்; மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர்; பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர்; திருவொற்றியூர், தியாகராஜர் கோவில்; கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர்; பெசன்ட் நகர், ரத்னகிரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடந்தது.ஆருத்ரா தரிசனத்தையொட்டி, பல கோவில்களில், நேற்று அதிகாலை ருத்ர ஜபம், பாராயணம், நடராஜ பெருமானுக்கு, 14 திரவியங்களால் அபிஷேக, அலங்காரம் நடந்தது. நேற்று மாலை, 5:00 மணி முதல் சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, தீப நடனம், அஷ்டோத்திர அர்ச்சனை ஆகியவை நடந்தன.ஓட்டேரி குயப்பேட்டை, கந்தசுவாமி கோவில்; புழல் காந்தி பிரதான சாலை, சொர்ணாம்பிகை - திருமூலநாதர் கோவில்; செங்குன்றம் பாளையத்தம்மன் கோவில்களிலும், நேற்றுகாலை, ஆருத்ரா தரிசனம் வெகு சிறப்பாக நடைபெற்றது.