பதிவு செய்த நாள்
24
டிச
2018
05:12
பேரூர்:மார்கழி திருவாதிரையை ஒட்டி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உட்பட சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடந்தது.மேலைச்சிதம்பரம் என்று போற்றப்படும் பேரூர் பட்டீஸ் வரர் திருக்கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கடந்த, 14ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசன விழா நேற்று (டிசம்., 23ல்) அதிகாலை, 3:30 மணிக்கு நடராஜ பெருமான் மகாபிஷேகத்துடன் துவங்கியது.
காலசந்தி பூஜை நடத்தப்பட்டு, நடராஜர் சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், சடையநாதர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பால், சந்தனம், தேன், இளநீர், திருநீறு உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு அபிஷேகங்கள் நடந்தன.
நடராஜர், சிவகாமி அம்மை உள்வீதி பிரகாரத்தில் வலம் வந்தனர். பின்னர், மேற்கு கோபுர வாசல் முன், மாணிக்கவாசகருக்கு நடராஜர் காட்சியளித்தார்.சிவகாமி அம்மையார் நடராஜரை வலம் வந்து, கோவில் முன் எழுந்தருளினார். ராஜகோபுரவாசல் திறக்கப்பட்டு, பெருமான், சிவகாமி அம்மையாருக்கு மாலை சூடினார். இருவரும் சமேதராக கனகசபை மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளித்தனர்.