பதிவு செய்த நாள்
25
டிச
2018
11:12
திருப்பூர்: பொங்கலுாரில் நேற்று, 1,008 கோ பூஜை வழிபாடு கோலாகலமாக நடந்தது.ஹிந்து முன்னணி சார்பில், திருப்பூர் மாவட்டம், பொங்கலுாரில், ஷோடச மகாலட்சுமி மகா யாக பெருவிழா நடந்து வருகிறது. ஷோடச என்பது, ௧௬ வகையான பூஜைகள் என்று பொருள். முதல் நாளில், கணபதி ஹோமம், கஜபூஜை, 108 அஸ்வ பூஜை, மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது.
இரண்டாம் நாளான நேற்று காலை, 9:00 மணியளவில், மகாலட்சுமி மகா யாகத்தின் முதல் கால வேள்வி பூஜை, மங்கள இசை, விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் குமாரசாமி முன்னிலை வகித்தார்.கொல்லிமலை உட்பட, பல்வேறு மலைகளில் சேகரிக்கப்பட்ட, 180 வகையான மூலிகைகள், சமித்துக்கள், வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்த மாங்கல்யம், பட்டு சேலை, மலர் மாலை, முக்கனிகள், யாகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜை நடந்தது.பூஜைகளை, திருக்கழுக்குன்றம், அன்புச்செழியன் சுவாமி தலைமையிலான, 80 சிவாச்சார்யார்கள் மேற்கொண்டனர். பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா, தேசிய கயிறு வாரிய தலைவர், ராதாகிருஷ்ணன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர், முருகன், மேகாலயா முன்னாள் கவர்னர், சண்முகநாதன் உட்பட பலர், யாக சாலையில் மூலிகைகளை சமர்ப்பித்து வழிபட்டனர்.1,008 நாட்டு பசுக்கள்யாக விழா நடக்கும் வளாகத்தில், காலை, 9:00 மணிக்கு, கோபூஜை துவங்கியது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார்.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையிலான குழுவினர், யாகசாலை பூஜைகளை நிகழ்த்தினர்.பல்வேறு வழிபாட்டுடன் கோமாதா யாக வேள்வி நடந்தது. பஞ்சகவ்ய தாய், பசுத்தாய், ஜீவாமிர்த மாதா, குலமாதா, கோமாதா, ஆவினம், நந்தினி, காமதேனு என, எட்டு வரிசைகள் அமைக்கப்பட்டு, 1,008 மாடுகள் தடுப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.அனைத்து பசுக்களுக்கும், பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து, சந்தனம், மஞ்சள், குங்குமும் வைத்து, அட்சதை துாவி பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, யாகசாலையில் இருந்த புனித தீர்த்தம், அனைத்து மாடுகளுக்கும் தெளிக்கப்பட்டது.ஒரு லட்சம் பக்தர்கள்யாகசாலை வழிபாட்டின் இரண்டாம் நாளான நேற்று, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இந்திய தபால் துறை சார்பில், விழா நினைவு தபால் உறை மற்றும் ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது.தபால் துறை தலைவர் அம்பேஷ் உபமன்யு, விழா நினைவு தபால் உறையை வெளியிட, மேகாலயா முன்னாள் கவர்னர், சண்முகநாதன் பெற்றுக் கொண்டார்.கன்னியாகுமரி ஸ்ரீ விவேகானந்த ஆசிரமத்தைச் சேர்ந்த சுவாமி சைதன்யானந்த மஹராஜ் பேசியதாவது:தியாகத்தையும், துாய்மையையும் உணர்த்துவதால், இந்தியாவில் காவிக்கொடி போற்றப்படுகிறது. ஹிந்துக்கள் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருந்து, சபரிமலையின் புனிதத்தை காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.