பதிவு செய்த நாள்
25
டிச
2018
11:12
செஞ்சி: பெங்களூரு செல்லும், விஸ்வரூப கோதண்டராமர் சிலையை, செஞ்சி கோட்டை வழியாக இல்லாமல், வேறு வழியில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு ஈஜிபுரத்தில், 108 அடி உயரத்தில், 11 தலைகளுடன், விஸ்வரூப கோதண்டராமர் சிலை பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.
இதற்காக வடிவமைத்த, 64 அடி நீளமுள்ள சிலையின் மைய பகுதியான கோதண்டராமர் சிலையை, திருவண்ணாமலை மாவட்டம், அகரகொரகோட்டையில் இருந்து, பிரமாண்டமான லாரியில் எடுத்துச் செல்கின்றனர்.இந்த சிலை, கடந்த 18ம் தேதி இரவு செஞ்சிக்கு வந்தது. செஞ்சி கோட்டை வழியாக செல்லும்போது, கோட்டை மதில்கள் அமைந்த பகுதியில், சாலை குறுகலாக இருந்ததால், சிலையின் பக்கவாட்டில் கூடுதலாக இருந்த பாறைகளை, 21ம் தேதி வெட்டி அகற்றினர்.இதன் பிறகு நடந்த ஆய்வில், செஞ்சியிலும் அடுத்துள்ள பகுதிகளிலும், 65க்கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்கள் அகற்ற வேண்டியது தெரிய வந்தது. இந்த பணியால், சிலையை கொண்டு செல்ல மேலும் சில நாட்களாகும். கூடுதல் செலவும் ஏற்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால் செஞ்சி பகுதி சாலையில், பல இடங்களில் சேறும், சகதியுமாக உள்ளது. எனவே, சிலையை இந்த வழியில, எடுத்து செல்வது பாதுகாப்பானதாக இருக்காது என்பதால், மாற்று வழி குறித்து ஆய்வு செய்து, சேத்துப்பட்டு - அவலுார்பேட்டை வழியாக திருவண்ணாமலை செல்வது என முடிவு செய்தனர்.சேத்துப்பட்டு, திருவண்ணாமலை சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. இந்த வழியில் செல்ல, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி கேட்டுள்ளனர். அனுமதி கிடைத்ததும், இன்று அல்லது நாளை சிலையை செஞ்சியில் இருந்து கொண்டு செல்ல உள்ளனர்.இதையடுத்து, சேத்துப்பட்டு சாலையை சரி செய்யும் பணியை, சிலை அமைப்பு குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.