பதிவு செய்த நாள்
26
டிச
2018
11:12
திருப்பூர் : பொங்கலுாரில், நேற்று நடந்த ஷோடச மகாலட்சுமி மகா யாக பெருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.ஹிந்து முன்னணி சார்பில், ஷோடச மகாலட்சுமி மகா யாக பெருவிழா, திருப்பூர் அருகே பொங்கலுாரில், 23ம் தேதி துவங்கியது. ஷோடச என்பது, 16 வகையான பூஜைகள் என்று பொருள்.மூன்றாம் நாளான நேற்று காலை, திருக்கழுக்குன்றம் அர்ச்சகர் குழுவினர், பழவகைகள், மூலிகைகள், பவளம், முத்து, தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், பட்டுச் சேலைகள், திருமாங்கல்யம் ஆகிய சீர்வரிசைகளை, யாக குண்டத்தில் சமர்ப்பித்து பூஜைசெய்தனர்.
மகா பூர்ணாஹுதி நிறைவில், பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை, குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டார்.மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணு, ஆதிலட்சுமி, சந்தானலட்சுமி உட்பட, 16 வகையான லட்சுமி தாயார்களுக்கும் ஷோடச மகாலட்சுமி மகாயாக பூஜைகள் நடந்தன.மகா யாகத்தின் நிறைவாக, மகா பூர்ணாஹுதி, பூஜைகளை தொடர்ந்து, மகாலட்சுமி தாயாருக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. வெள்ளியில் செய்த மகாலட்சுமி சிலையை பிரதிஷ்டை செய்து, 500 கிலோ துளசி மற்றும், 500 கிலோ செவ்வந்தி பூக்களை கொண்டு, புஷ்பாஞ்சலி வழிபாடு நடந்தது. இறுதியாக, தாயாருக்கு, மகா தீபாராதனை நடந்தது.ஹிந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் முன்னிலையில், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.பக்தர்களுக்கு, மூன்று நாட்களும், தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. 3,000த்துக்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.மகாலட்சுமி காலண்டர்மகாலட்சுமி பூஜைக்கு முன்பதிவு செய்த குடும்பங்களுக்கு, சிறிய மகாலட்சுமி சிலை, மஞ்சள் மற்றும் குங்குமம், மஞ்சள் அட்சதை அடங்கிய பைகள் வழங்கப்பட்டன.மேலும், 16 லட்சுமி தாயார்களின் படத்துடன் கூடிய, ஷோடச மகாலட்சுமி காலண்டர் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பள்ளி குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும், கிராமிய நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.