சபரிமலை: ஆரன்முளாவிலிருந்து புறப்பட்ட ஐயப்பனின் தங்க அங்கி, இன்று மாலை சன்னிதானம் வருகிறது.கார்த்திகை ஒன்றாம் தேதி துவங்கிய மண்டலகாலம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. நாளை மதியம் மண்டலபூஜை நடைபெறுகிறது.திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள், ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கிய தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலிருந்து புறப்பட்டு இன்று மதியம் ஒரு மணிக்கு பம்பை வந்தடைகிறது. அங்கு கணபதி கோவில் அருகே பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு பின் சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும்.மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வரும் அங்கிக்கு தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்பு கொடுப்பர். 6:25 மணிக்கு 18-ம் படி வழியாக சன்னிதானம் வரும் அங்கியை தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் மூலவருக்கு அணிவிப்பர்.நாளை காலை 3:15 மணிக்கு தொடங்கும் நெய்யபிஷேகம் 11:00 மணிக்கு நிறைவு பெறும். 12:00 மணிக்கு மண்டலபூஜை நடைபெறும். நாளை இரவு 11:00மணிக்கு நடை அடைக்கப்படும். மகரவிளக்கு கால பூஜைக்காக 30-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.