பதிவு செய்த நாள்
03
ஜன
2019
03:01
துன்ப சுமை குறையும்: 2500 அடி இயற்கை சிவலிங்கமாக காட்சிதரும் இம்மலையை தரிசிக்கவும், தந்தையின் தோள்களில் அமர்ந்துள்ளது போல் இம்மலையின் உச்சியில்
இருபுறமும் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் விநாயகர், முருகனை வணங்குவதற் காகவும் பக்தர்கள் ஏராளமானோர் வருகிறார்கள்.
ஈசன் குடும்பத்துடன் கோவில் கொண்டுள்ள மலை என்பதால் இதன் உச்சிக்கு சென்று வழிபட்டால் தங்கள் துன்ப சுமையை இறைவன் இறக்கி வைப்பார் என்பது இந்துக்களின் நம்பிக்கை.அதே போல் அங்கு ஜீவ சமாதி கொண்டுள்ள சேக் அப்துல்லா அவுலியா தர்காவை காண முஸ்லிம்களும் ஏராளமானோர் வருகின்றனர்.
பாழாகும் பாறைகள்: பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் போர்வையில் சமூக விரோதிகள் சிலரும் ஊடுருவி மலைக்கு சென்று விடுகின்றனர். அவர்கள் மலைப்பாதைகளில் அமர்ந்து மது அருந்திவிட்டு, பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பையை அங்கேயே வீசிவிடுகின்றனர். அவை தேங்கி ஒட்டுமொத்த பிரான்மலையே சுற்றுச்சூழல் பாதிப்பால் பாழாகி வருகிறது. இன்னும் சிலர் பெயின்ட்களை கொண்டு வந்து புராதன பாறைகளிலும், கோயில் சுவர்களிலும் தங்கள் பெயர் மற்றும் காதல் வசனக் குறியீடுகளை எழுதிச்செல்கின்றனர். இதனால் இம்மலையின் பழமையும், பாரம்பரியமும் கெடுகிறது.
கண்காணிப்பு இல்லை: போதை இளைஞர்கள் பக்தர்கள், பெண்களிடம் வம்பு செய்வதும் நடக்கிறது. ஏற்கனவே இம்மலையில் தீவிரவாத தொடர்புடைய சிலர் வெடிகுண்டு தயாரிக்க முயற்சி செய்து போலீசாரிடம் பிடிபட்டதும், மலைக்கு சுற்றுலா சென்ற மாணவிகள் இருவர் சுனையில் சிக்கி பலியானதும் நடந்துள்ளது. இம்மலைக்கு பெண்கள், குழந்தைகள் என தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில் அவர்களை கண்காணிக்கவோ, பாதுகாப்பு அளிக்கவோ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இம்மலைக்கு செல்லும் பாதையானது அடிவாரத்தில் இருந்து நடுப்பகுதி வரை தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. அதற்கு மேல் புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் சில பகுதியும், உச்சியில் கோயில்கள் உள்ளிட்ட சில இடங்கள் சிவகங்கை மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. அதிகாரிகள் கண்டுகொள்ளாததற்கு இவையே காரணம் என்று கூறப்படுகிறது.
மலையை பாதுகாக்கலாம்: தனியார் இடத்தை பொறுத்தவரை மலையில் அவர்களுக்கு சொந்தமான சித்தர் கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலுக்கு பக்தர்கள் வர வசதியாக அவர்களே பாதை அமைத்து கொடுத்துள்ளனர். அப்பாதை வழியாகத்தான் பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று வருகின்றனர். ஆனால் தனியார் பாதை என்பதால் அதனை பயன்படுத்த அதிகாரிகள் தயங்குகிறார்கள். கண்காணிப்பு பணியில் ஈடுபட முடியாததற்கு அதுவே காரணம் என்று கூறப்படுகிறது.
எனவே அரசு நிர்வாகம் தனியார் இடத்துக்காரர்களின் உதவியை நாடி மலையையும், பக்தர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். குறிப்பாக நிர்வாக வசதிக்காக மலையில் இரண்டு மாவட்ட வனப்பகுதியை ஒரே (சிவகங்கை) மாவட்ட வனப்பகுதியாக மாற்றவேண்டும்.
முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா வைத்து மலைக்கு செல்பவர்கள், திரும்புவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கவேண்டும். மலையின் இயற்கைத்தன்மையை பாழாக்குவதுடன் பக்தர்களுக்கு இடையூறு செய்யும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிங்கம்புணரி: முல்லைக்கு தேரீந்த பாரிமன்னன் ஆண்ட பகுதி தான் பறம்புமலை எனும் பிரான்மலை. கபிலர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சங்க கால புலவர்களால் பாடல் பெற்றமலை. இங்குள்ள மங்கைபாகர் தேனம்மை வடுக பைரவர் கோவில் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதும், பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் 5வது சிறப்புக்குரியதும் ஆகும்.