சபரிமலை:சபரிமலைக்கு 50 வயதுக்கு உட்பட இரு பெண்கள் வந்ததால் சபரிமலை நடை அடைத்து சுத்தி கலசபூஜை நடத்திய தந்திரி கண்டரரு ராஜீவரருவிடம் விளக்கம் கேட்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. பிந்து, கனகதுர்கா என்ற பெண்கள் நேற்று முன்தினம் சன்னிதானம் வந்து தரிசனம் நடத்தியதை தொடர்ந்து, தந்திரி உத்தரவுப்படி மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை அடைத்தார். பின் சுத்தி கலச பூஜை நடத்தது. இதனால் பக்தர்கள் தரிசனம் ஒரு மணி நேரம்தடைபட்டது.இது தொடர்பாக தேவசம்போர்டு ஆணையர் வாசு கூறுகையில், தேவசம்போர்டுடன் ஆலோசனை நடத்தாமல் நடை அடைக்க தந்திரிக்கு அதிகாரம் இல்லை. அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்படும். பதில் கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.ஆனால் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் இதை உறுதி செய்யவில்லை. ஜன.,5ல் திருவனந்தபுரத்தில் நடக்கும் தேவசம்போர்டு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும், என அவர் தெரிவித்தார்.