பதிவு செய்த நாள்
04
ஜன
2019
12:01
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதம் 2017-18 நிதியாண்டில் நான்கு கோடியே 27 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. மாவு சோடா, கலர் பொடி கலப்படம் இன்றி கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படுவதால் ருசியாக இருப்பதுடன், வயிறு உபாதைகள் ஏற்படுவதில்லை. டில்லியில் நடந்த சர்வதேச உணவு திருவிழாவில் கலப்படம் இல்லாத உணவு, என ஆய்வில் கண்டறியப்பட்டது.
கோயில் பிரசாதம் தயாரிப்பு, முன்பு தனியாரிடம் இருந்தது. தரம் சரியில்லாததால் தடை செய்து கோயில் சார்பில் முதல் முறையாக 2005 ஆக.,3ல் பிரசாதம் தயாரிக்கப்பட்டது. துவக்கத்தில் அப்பம், அரிசி முறுக்கு, புளியோதரை ஆகியவை தலா 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின், 2009 நவ.,25ல் 7 ரூபாயாகவும், 2011 ஜன.,9 ல் 10 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டது. உணவு பொருள் விலை உயர்வு இருந்தபோதும் கடந்த ஏழு ஆண்டாக பிரசாதம் விலையை உயர்த்தவில்லை. ருசி, மிருது தன்மை, கவர்ச்சிக்காக பிரசாதம் தயாரிப்பில் மாவு சோடா, கலர் பொடியை கலப்பது வழக்கம். இங்கு அவ்வாறு ஏதும் சேர்ப்பது கிடையாது. கோயில் சார்பில் இனிப்பு, காரம் தயாரிக்கும் மாஸ்டர்களை நியமித்துள்ளனர். அக்மார்க் முத்திரை நெய், நல்லெண்ணெய், உயர்ரக நயம் கடலை மாவு, அரிசி மாவு, கருப்பட்டி, ரசாயனம் கலப்படம் இல்லாத வெல்லம், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், புளி போன்றவற்றை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து ரசாயன கலவையின்றி தயாரிக்கின்றனர். இதனால் கமிஷன் இன்றி கோயில் பணம் சேமிப்பாகிறது. பிரசாதம் 2016 - 17 ல் 3 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கும், 2017 - 18ல் 4 கோடியே 27 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையானது.
டில்லி கண்காட்சி: மிகக்குறைந்த லாபம்; பக்தர்களுக்கு சேவை என்ற அடிப்படையில் பிரசாதத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிப்பதால் உண்போருக்கு வயிறு உபாதை ஏற்படுவதில்லை. வாழை இலையில் வைத்து வழங்குகின்றனர். பிரசாதம் விற்பனையில் கோயில் நிர்வாகம் 2016 - 17 ல் ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய், 2017 - 18 ல் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. சமீபத்தில் டில்லியில் சர்வதேச உணவு கண்காட்சி நடந்தது. இதில் கோயில் பிரசாதம் இடம் பெற்றது. அதை உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆய்வு முடிவில் ரசாயனம் கலவையின்றி தயாரிக்கப்பட்ட உணவு பொருள் பட்டியலில் பிரசாதம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.