பதிவு செய்த நாள்
04
ஜன
2019
01:01
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் அருகே, சுற்றுலா வாகனங்கள் நிறுத்த, போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, தினமும், வெளியூர்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பேருந்து மூலம் வருகின்றனர். தற்போது, அய்யப்ப பக்தர்கள் மற்றும் மேல்மருவத்துார் செல்லும் செவ்வாடை பக்தர்களும் அதிகம் வருகின்றனர். இவர்கள் வரும் வாகனங்கள், ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரம் அருகில் இருந்து, 16 கால் மண்டபத்தை சுற்றியுள்ள பகுதி வரை நிறுத்தப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, இரு போலீசார், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். இருப்பினும், நேற்று முன்தினம், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின், போலீசார், நெரிசலை சீரமைத்தனர். இதனால், நேற்று முதல், 16 கால் மண்டபம் பகுதியில், கார், வேன், பேருந்து உள்ளிட்ட சுற்றுலா வாகனங்கள் நிறுத்த தடை விதித்து, போலீசார் இரும்பு தடுப்பு அமைத்தனர்.