பதிவு செய்த நாள்
04
ஜன
2019
02:01
பார்வையற்றோருக்காக பொழிந்த இசை!டு பீ பிளைண்டு இஸ் நாட் மிசரபிள்; நாட் டு பீ ஏபிள் டு பியர் பிளைண்ட்நெஸ் இஸ் மிசரபிள் -பார்வையற்றவர்கள் குறித்து, பிரிட்டன் கவிஞர், ஜான் மில்டன் கூறிய கூற்று இது. பார்வையற்றவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்த்ததும், இந்த கூற்று நினைவுக்கு வந்தது.
மாறுபட்ட நல்ல நிகழ்ச்சி.பார்வையற்றவர்களுக்கு ஈடான நிலையில், மற்றவர்களும், கேட்டு மட்டுமே ரசிக்கும் வகையில், அரங்கிலும், மேடையிலும், ஒளியின் சுவடே இல்லை.அனில் ஸ்ரீநிவாசன் என்ற பியானோ இசைக் கலைஞரின் கருத்தாக்கத்தில் உருவான இந்நிகழ்ச்சியில், பாடகர் பரத் சுந்தரும், வயலின் கலைஞர் லால்குடி விஜயலட்சுமியும், மிருதங்க வித்வான் கிருஷ்ண கிஷோரும் மிகுந்த சிரத்தையுடன் பங்கேற்று, தங்களது ஒத்துழைப்பைக் கொடுத்தனர்.
பியானோவில், கஜானனயுதம் வாசித்தார், அனில் ஸ்ரீநிவாசன். தொடர்ந்து, நான் ஒரு விளையாட்டு பொம்மையா, பிறவா வரம் தரும் ஆகியவற்றைக் கேட்டபோது, மெல்லிசைக்கு அவர் முக்கியத்துவம் அளித்தது புரிந்தது.பரத் சுந்தர், ஆபேரியில், ராகமும் தானமும் பாடிய பின், அதற்கான பல்லவியை, காணக் கண் ஆயிரம் வேண்டும்; அழகன் முருகன் அவனைக் காண என்று அமைத்திருந்தார். பல்லவியில் பாடிய மற்ற ராகங்கள், வசந்தா, சுப பந்துவராளி, நாசிகாபூஷணி. காண வேண்டாமோ என்ற, சிவனின் மற்றொரு பாடலைப் பாடினார்.
பல்லவியும், இந்தப் பாடலும், பார்வை என்பதையே மையப் பொருளாகக் கொண்டுஇருந்தது. அடுத்து வயலினில், தீட்சிதரின், மீனாக்ஷிமேமுதம் தேஹி என்ற பாடலை வாசித்தளித்தார், விஜயலட்சுமி.அசாதாரண முறையில் நடத்தப்பட்ட, இந்த நிகழ்ச்சியிலிருந்து கிடைக்கும் தொகை முழுவதுமே, ஞானதர்ஷன் சேவா இல்லத்தின் நலனுக்காக வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது.
ஞானதர்ஷன் சேவா இல்லத்தில், பார்வையிழந்த, 35 பெண்கள் பேணிக் காக்கப்படுகின்றனர். இதன் நிறுவனரும், இயக்குனருமான சுந்தரேசன் கூறியதாவது:இந்த நிகழ்ச்சியை, 2006- - 07லிருந்து நடத்தி வருகிறோம். கண் தெரியாத பெண்கள், எங்கள் அமைப்பில் தங்கிப் படிக்கலாம். இதுவரை, பார்வையற்ற சகோதரிகள், 500 பேர் பயனடைந்துஉள்ளனர். பிளஸ் 2 முடித்து இருப்பவர்களைத் தேடி, இங்கே சேர்த்துக் கொள்கிறோம்.கல்லூரிக்கான அட்மிஷனும் பெற்றுக் கொடுத்து, அவர்கள் அங்கு சென்று திரும்பி வருவதற்கான ஏற்பாட்டையும் செய்கிறோம். சரித்திரம், இலக்கியம் மற்றும் கம்ப்யூட்டர் போன்றவற்றிற்கு, ஆசிரியர்களை நியமித்து, மாணவியருக்கு பாடமும் நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.