காரைக்கால் விறுவிறுப்பாக நடைபெறும் பொங்கல் பானை தயாரிப்பு பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2019 02:01
காரைக்கால்:பொங்கலுக்கு தேவையான மண் பானைகள், அடுப்புகள் தயாரிக்கும் பணி காரைக்காலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.புது பானையில் பொங்கல் அன்று, பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இதனால் காரைக்காலில் புது பானைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
கோட்டுச்சேரி, மேலஓடுதுறை ஆகிய பகுதிகளில் இப்பணி நடந்து வருகிறது. பானை தயாரிக்க தேவையான களிமண், தயாரித்த மண் பாண்டங்களை சுடுவதற்கு தேவையான தேங்காய் மட்டை உள்ளிட்ட பொருட்கள் விலையேற்றததால், கடந்த ஆண்டு 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறிய பானை, இந்த ஆண்டு ரூ.45 முதல் ரூ.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுகுறித்து கோட்டுச்சேரி மண்பாண்ட தொழிலாளர் கலியபெருமாள் கூறுகையில் கடந்த காலத்தில் பானைகள் தயாரிக்க கையால் பெரிய சக்கரம் சுற்றப்படும். இந்த முறையால் கால விரயம், உடல் வலி ஏற்படுவதால், தற்போது மின் மோட்டார் இணைக்கப்பட்ட சக்கரம் மூலம் நாள் ஒன்றிற்கு 100 பானைகள் செய்ய முடிகிறது. இந்த இயந்திர சக்கரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக விலை கொடுத்து களிமண் வாங்கும் நிலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மண்பானை தொழிலுக்காக மானிய கடன் வசதி மற்றும் சலுகைகளை அரசிடம் கேட்டு வருகிறோம். அரசு உதவி செய்யவில்லை என்றார்.