பதிவு செய்த நாள்
04
ஜன
2019
02:01
கோவை:இஸ்கான் ஜெகநாத் ரத ஊர்வலத்தை முன்னிட்டு, நாளை(5ம் தேதி) போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கோவை இஸ்கான் ஸ்ரீ ஜெகநாத் ரத ஊர்வலம் நாளை மதியம், 2:00 மணிக்கு நடக்கிறது.
இதையடுத்து நாளை (5ம் தேதி) காலை, 10:00 முதல் இரவு 8:00 மணி வரை, போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டிலிருந்து, உக்கடம் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், ஒப்பணக்கார வீதியில் செல்ல அனுமதியில்லை. சுங்கம் பைபாஸ், ரயில்வே மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும்.அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்திலிருந்தும், லங்கா கார்னரிலிருந்தும் பாலக்காடு ரோடு செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் பெரிய கடைவீதி, வின்சென்ட் ரோடு வழியாக உக்கடத்தை அடைந்து, வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
பஸ்கள் வழக்கம்போல், டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்லலாம். ஆனால், மதியம், 1:00 முதல் மாலை, 6:00 மணி வரை டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி, ஒப்பணக்கார வீதி செல்ல அனுமதியில்லை.அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்திலிருந்து தடாகம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும், சுக்கிரவார்பேட்டை வழியாக காந்திபார்க் அல்லது பூமார்க்கெட் வழியாக செல்ல வேண்டும்.
தடாகம் ரோட்டிலிருந்து பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி ரோடு செல்லும் அனைத்து வாகனங் களும் பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி ரோடு வழியாக சிவாலயா தியேட்டர் அடைந்து புட்டுவிக்கி ரோடு வழியாக, பாலக்காடு ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டுக்கு செல்ல வேண்டும்.பேரூரில் இருந்து செட்டி வீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சிவாலயா சந்திப்பு, பேரூர் பைபாஸ் ரோடு, உக்கடம் அடைந்தும் அல்லது சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு, சொக்கம்புதூர், பொன்னையராஜபுரம், காந்திபார்க் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். ஆர்.ஜி.,வீதி மற்றும் வைசியாள் வீதிக்கு, காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணி வரை லாரி போக்குவரத்து தடை செய்யப் படுகிறது. ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி., வீதி, ஆர்.ஜி., வீதி, டி.கே., மார்க்கெட் ஆகிய ரோடுகளில் காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை எந்த வாகனமும் நிறுத்தக்கூடாது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.