பதிவு செய்த நாள்
05
ஜன
2019
12:01
பழநி: தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காக பழநி முருகன்கோயில் மலை, கிரிவீதியில் உள்ள காவல் தெய்வங்களுக்கு படையலிட்டு சிறப்பு யாக பூஜைகள் நடந்தது.பழநி முருகன் கோயிலில் தைப்பூசவிழா வரும் ஜன.,15ல் துவங்கி 24 வரை நடக்கிறது.
இவ்விழாவுக்காக மார்கழியில் மாலை அணிந்த முருக பக்தர்கள் விரதம் இருந்து, பாதயாத்திரையாக வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பாதுகாப்பு, நலன் வேண்டி டிச., 27 முதல் ஜன.,4 வரை காவல் தெய்வங்களுக்கு பிரார்த்தனை, பூஜைகள் செய்தனர். மலைக்கோயிலில் ஆனந்தவிநாயகர்கோயிலில் கணபதிஹோமத்துடன் துவங்கி தொடர்ந்து அடிவாரம் வீரதுர்க்கையம்மன், கிரிவீதி அழகுநாச்சியம்மன் கோயில், பாதவிநாயகர் கோயில், கன்னிமார், கருப்பணசாமி, பைரவர் கோயிலில் படையலிட்டு பூஜைகள் நடந்தது.நேற்று இறுதியாக மேற்குகிரிவீதி மகிஷாசூரமர்த்தினி கோயிலில் அம்மனுக்கு 16வகை அபிேஷகம், யாகபூஜையுடன் தீபாராதனை நடந்தது. இரவு படிப்பாதையில் உள்ள காவல்தெய்வம் இடும்பன்கோயிலில் படையலிட்டு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் செய்தனர்.