பதிவு செய்த நாள்
05
ஜன
2019
12:01
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர் சிலை திருட்டு முயற்சியில் ஈடுபட்டதால், கோயிலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் அறிவுரையின் பேரில் பணிகள் நடக்கிறது. உத்தரகோசமங்கையில் மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி கோயில் உள்ளது. இங்கு மரகத நடராஜர் சன்னதி தனியாக உள்ளது. இதில் ஆறரை அடி உயர மரகத நடராஜர் சிலை உள்ளது. இது பல கோடி மதிப்புள்ளது.
கொள்ளை முயற்சி: இதனை 2018 நவ.,4ல் கொள்ளையடிக்க முயற்சித்தனர். அங்கிருந்த காவலர் செல்லமுத்துவை 60, அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றனர். அதன் பின்பு துப்பாக்கி போலீசார் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஐ.ஜி., அறிவுரை: கொள்ளை முயற்சி நடந்த இடத்தை நவ.,6 ல் பார்வையிட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல், கோயில் நிர்வாகமான ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்த அறிவுரை வழங்கி சென்றார். இதன்படி மரகதநடராஜர் சன்னிதியின் முகப்பில் 32 எம்.எம்., தடிமன் கொண்ட இரும்பு கம்பியாலான கேட் அமைக்கப்பட்டுள்ளது. சந்நிதியின் கிழக்கு, மேற்கு புறங்களில் இருந்த மரக்கதவுகள் அகற்றப்பட்டு அங்கும் இரும்பு கம்பிகளால் ஆன கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு கதவு 350 கிலோ எடையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை எளிதில் அறுத்து எடுக்க முடியாது. கோயில் பிரகாரம், கோபுர வாசல், மற்றும் மங்களநாதர், மங்களேஸ்வரி சன்னிதி உட்பட அனைத்து பகுதிகளிலும் 28 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு முழுவதுமாக பலப்படுத்தும் பணிகள் ஒரு சில நாட்களில் நிறைவு பெற உள்ளது.