தாண்டிக்குடி: கொடைக்கானல் மலைப்பகுதியின் ஆன்மிக தாய் கிராமம் என அழைக்கப் படுவது தாண்டிக்குடி. இங்கு இன்றளவும் ஜல்லிக் கோட்டையில் நீதி (உண்மை) நிலை நாட்டப்படுகிறது என்பது வியப்புக்குரியதுதானே.
தொன்று தொட்டு பல நூற்றாண்டுகளாக முன்னோர்களால் கிராமத்தின் நடுவே வழிபாடு செய்யப்பட்டது தான் ஜல்லிக்கோட்டை. இங்கு வழிபடப்படும் சுவாமி கரியமாலை மையமாக கொண்டு அமைக்கப்பட்ட தலம். வனப்பகுதியில் உள்ள கோயிலில் வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை மட்டுமே நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும்.
இதனால், பொதுமக்கள் எளிதில் வழிபட ஏதுவாக கிராமத்தின் மையத்தில் கரியமால் கோவிலை எதிர்நோக்கி அமைக்கப்பட்டுள்ளதே "நடுகல் தான் இந்த ஜல்லிக்கோட்டை. பற்றி தாண்டிக்குடி கிராம கோவில் மேலாளர் இளங்கோவன் கூறியதாவது:
பிரதான விசேஷ நேரத்தில் பொதுமக்கள் இங்கு வழிபடுவது வழக்கம். மழையின்றி வறட்சி நீடிக்கும் சமயத்தில் சித்திரை மாதம் ஒரு வெள்ளிக்கிழமையில் கிராமத்திற்குள் தண்டோரா போட்டு வீடுதோறும் ஒரு செம்பு தண்ணீர் கொண்டு வந்து வைத்து விடுவர். பின் சுவாமிக்கு எண்ணெய் காப்பிட்டு சுவாமியை குளிர்ச்சியூட்டுவதன் மூலம் கிராமம் செழிப்படைய மழை கிடைத்து விவசாயம், குடிநீர் பிரச்னை தீருமாம்.
இதற்கு ஐதீக முறைப்படி மழைவாழ் மேள, தாளம் மூழங்கி பட்டக்காரர், ஊர் பெரியவர்கள் முன் மாலையில் சுவாமி வழிபாடு செய்வர். பின் நல்ல மழை பெய்யும் என்பதும், அங்கு பிரச்னைகளை கூறி முறையிட்டால் தீர்வு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. அதனால் அநீதி இழைப்போரிடம் "இது காரியமால் மண் பார்த்துக்கோங்க என இங்குள்ளோர் அடிக்கடி கூறுவது வாய்வார்த்தையாக நிலைத்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால் ஜல்லிக்கோட்டையை இன்றளவும், பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு 97878 79884ல் தொடர்பு கொள்ளலாம்.