பதிவு செய்த நாள்
05
ஜன
2019
02:01
உடுமலை: உடுமலை அருகே, சோமவாரபட்டியில் ஆல்கொண்டமால் அமைந்துள்ளது. கால்நடைகளின் காவல் தெய்வமாக விளங்கி வரும், ஆல்கொண்டமால் கோவிலில் ஆண்டு தோறும், தைத்திருநாளை முன்னிட்டு திருவிழா நடத்தப்படுகிறது.
மூன்று நாட்கள் நடத்தப்படும் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து விவசாயிகள் வண்டிகள் கட்டிவந்து தரிசனம் செய்கின்றனர். பசு, காளை, ஆடு, நாய், குதிரை, வேட்டை நாய் உள்ளிட்ட பலவித உருவார பொம்மைகளை வைத்து வழிபடுகின்றனர்.மேலும், மாட்டுப் பொங்கலன்று பசுக்கள் ஈனும் கன்றுகளை ஆல்கொண்டமால் கோவிலுக்கு தானமாக வழங்குகின்றனர். ஆண்டுதோறும், 50 முதல், 100 கன்றுகள் வரை தானம் வழங்கப்படுகிறது.
திருவிழாவின் போது மட்டும் கோவில் வளாகத்தில் தற்காலிக கோசாலை அமைத்து, தானமாக வழங்கப்படும் கன்றுகள் கட்டப்படுகிறது. பின், தமிழகத்திலுள்ள மற்ற கோசலை களுக்கு தானமாக பெறப்பட்ட கன்றுகள் அனுப்பப்படுகிறது. எனவே, கோவில் வளாகத்தில் நிரந்தர கோசாலை அமைத்து தானமாக வழங்கப்பட்ட கால்நடைகளை பராமரிக்க, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.