பழநி:பழநி முருன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இலவச கூடாரத்தில் தங்க பணம் வசூலிப்பதாக விஸ்வஇந்துபரிஷத் புகார் தெரிவித்துள்ளது.மாவட்ட இணைச்செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது: பழநிக்கு தைப்பூச பக்தர்களின் நலன் கருதி வின்ச் ஸ்டேசன், பழைய நாதஸ்வர பள்ளி பகுதிகளில் இலவச தங்கும் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. அங்குள்ள பாதுகாவலர்கள் பக்தர்களிடம் பணம் வசூல் செய்துகொண்டு அவர்களை தங்க அனுமதிக்கின்றனர்.
ஆனால் இதை கோயில் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது மெத்தனப்போக்கை காட்டுகிறது.பக்தர்கள் தங்க இடமின்றி கிரிவீதி, சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஆபத்தான முறையில் சமையல் செய்கின்றனர். எனவே பூட்டப்பட்ட அத்தனை இலவச தங்கும் கூடாரங்களையும் திறக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும். தைப்பூச ஆலோசனை கூட்டத்தை பழநியில் நடத்த வேண்டும். உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்டு பக்தர்களுக்கு வசதிகள் செய்துதர வேண்டும். இவ்வாறு கூறினார்.