பதிவு செய்த நாள்
08
ஜன
2019
11:01
காரைக்காலில் உள்ள திருநள்ளாரில், பிரசித்திப் பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, நவகிரகங்களில் ஒருவரான, சனீஸ்வர பகவான், தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குவதால், நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும், உலகம் முழுவதும் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். குறிப்பாக, சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாரில் குவிந்து விடுவது வழக்கம். சோழர் காலத்தில் கட்டப்பட்ட, பழமையான திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், புதிதாக ஏழு நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு, கடந்த 2006ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதால், கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து, கோவிலில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவிலின் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டது. மூலவர் தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை அம்பாள், சனீஸ்வர பகவான் சன்னதி, ராஜகோபுரம் வளைவு, 63 நாயன்மார்கள், கட்டை கோபுர முகப்பு, கொடிமரம், தல விருட்சம், பலி பீடம், நள தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் சீரமைப்பு பணி முடிந்து, வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தை, வரும் பிப்ரவரி 12ம் தேதி நடத்தலாம் என தோராயமாக தேதி குறிக்கப்பட்டு, திருப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. திருப்பணிகள் முடிந்த பின், கும்பாபிஷேக தேதி இறுதி செய்யப்பட உள்ளது. கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்தும், சிறப்பு பஸ்கள் இயக்குவது, உள்ளூர் விடுமுறை அறிவிப்பது உள்ளிட்டவைகள் குறித்து, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.