கோவில் விழாவில் படுகர் இன மக்கள் நடனம்
பதிவு செய்த நாள்
08
ஜன 2019 12:01
சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில், மேல்சீமை ஹெத்தையம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கேர்மாளம் வனப்பகுதியில் உள்ள கோட்டாடை பகுதியில், படுகர் இன மக்களின், மேல்சீமை ஹெத்தையம்மன் கோவில் உள்ளது. இங்கு, கடந்த இரண்டு நாட்களாக திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில், தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த கேர்மாளம், கோட்டாடை, தேவர்நத்தம், ஓசட்டி, அட்டைகட்டி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள், பங்கேற்றனர். விவசாயம் செழிக்கவும், ஊர் வளமாக இருக்கவும் கோட்டாடை மலைக்கிராமத்தில் உள்ள, மேல்சீமை ஹெத்தையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விழா கொண்டாடுவர். இதன்படி, இந்தாண்டு, கணபதி ஹோமம், பூச்சொரிதல், நவ கலச பூஜையுடன், கோவில் விழா துவங்கியது. 100க்கு மேற்பட்ட படுகர் இன மக்கள், தங்கள் குடும்பத்துடன் பாரம்பரிய உடையணிந்து, நடனமாடினர். விழாவில், ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் பகுதிகளை சேர்ந்த, படுகர் இன மக்கள் உட்பட பொதுமக்களும் பலர், கலந்து கொண்டனர்.
|