பதிவு செய்த நாள்
10
ஜன
2019
11:01
ராமேஸ்வரம்: புனித தலமான ராமேஸ்வரத்தில் கடந்த 54 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்து போன 30 புனித தீர்த்தங்களை பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர் புதுப்பித்துள்ளனர். இவற்றை ஜன.,12ல் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பக்தர்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை தவிர கோயிலுக்கு வெளியே அதாவது ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபத்தில் உள்ள 42 தீர்த்த குளம், கிணறுகளில் பக்தர்கள் நீராடிய பிறகு கோயிலில் நீராடி செல்வார்கள்.
கடந்த 1964ல் ஏற்பட்ட புயலுக்கு பிறகு 42 தீர்த்தங்களில் பல அழிந்து போய் மணலில் புதைந்தன. பல ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியது. இந்த புனித தீர்த்தங்களை புனரமைக்க விவேகானந்தா கேந்திரத்தின் பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர் கடந்த ஐந்து ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டனர். அவர்களின் முயற்சிக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. புதைந்தும், சேதமடைந்தும் காணப்பட்ட 30 தீர்த்தங்களை கண்டு பிடித்து 5 கோடி ரூபாய் செலவில் புனரமைத்தனர். மற்ற 12 தீர்த்தங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலும், கண்டறிய முடியாத நிலையிலும் உள்ளது. புதுப்பித்த இத்தீர்த்தங்களை பக்தர்கள், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஜன.,12ல் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்து அர்ப்பணிக்க உள்ளார்.
நகுல தீர்த்தம்: பஞ்சபாண்டவர்களில் ஒருவரான நகுலன், தன்னை விட அழகு, அறிவானவர் யாரும் இல்லை என நினைத்தவர். பாரத போருக்கு முன்பு இங்கு நீராடிச் சென்றதால் இத்தீர்த்தம் உருவானது. இங்கு நீராடினால் இழந்த சொத்துக்களை மீட்டு, உடல் புதுப்பொலிவு பெறும் என்பது ஐதீகம்.
துாரம் : சகாதேவ தீர்த்தத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் உள்ளது.
பீம தீர்த்தம்: பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன் ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட பலசாலி. பாரத போருக்கு முன்பு இங்கு நீராடியதாக கூறப்படுகிறது. இங்கு நீராடினால் நோயின்றி பலசாலி ஆகலாம் என்பது ஐதீகம்.
துாரம் : ராமேஸ்வரம் கோயிலில் இருந்து 3 கி.மீ.,ல் சம்பை கிராம சுற்றுலா சாலையில் கெந்தமாதன பர்வதம் அருகில் அமைந்துள்ளது.
அங்கத தீர்த்தம்: வாலியின் மகன் அங்கதன். சீதையை மீட்பதில் ராமருக்கு பேருதவி புரிந்தார். இவருக்கும் தீர்த்த கிணறு உள்ளது. இங்கு நீராடினால் வாழ்கையில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
துாரம் : ராமேஸ்வரம் கோயிலில் இருந்து 2.5 கி.மீ.,ல் கெந்தமாதன பர்வதம் ராமர் கோயிலுக்கு செல்லும் சாலை அருகில் உள்ளது.
ராமர் தீர்த்தம்: ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு வந்த ஸ்ரீராமர், தோஷம் நீங்க இத்தீர்த்த குளத்தில் நீராடியதாக ராமாயண வரலாற்றில் கூறப்படுகிறது. இங்கு நீராடினால் பொய் சொன்ன பாவங்கள் நீக்கும் என்பது ஐதீகம்.
துாரம் : ராமேஸ்வரம் கோயிலில் இருந்து 500 மீட்டரில் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகில் அமைந்துள்ளது.
அனுமான் தீர்த்தம்: பிரம்மஹத்தி தோஷம் பூஜைக்காக அனுமான் சிவலிங்கத்தை எடுத்து வர தாமதம் ஆனதும், சீதை மணலில் சிவலிங்கம் வடிவமைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அனுமான், சீதா உருவாக்கிய மணல் சிவலிங்கத்தை தன் வாலில் கட்டி இழுத்த போது வால் அறுந்து ரத்தம் வெளியேறி அப்பகுதி குளம்போல் தேங்கியது. அதுவே அனுமான் தீர்த்தம் ஆனது. இங்கு நீராடினால் துணிச்சல், தன்னம்பிக்கை பெருகும்.
துாரம் : ராமேஸ்வரம் கோயிலில் இருந்து 500 மீட்டர் துாரத்தில் சம்பை கிராம சாலை அருகில் பத்திரகாளியம்மன் கோயில் எதிரில் அமைந்துள்ளது. பக்தர்கள் ஆட்டோ, வேன், காரில் செல்லலாம்.
சகாதேவ தீர்த்தம்: பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன், ஜோதிடத்தில் தன்னை விட மிஞ்சியவர் யாரும் இல்லை என்ற கர்வம் கொண்டவர். போருக்கு முன்பு ராமேஸ்வரத்தில் நீராடிச் சென்றதால் இத்தீர்த்தம் உருவானது. இங்கு நீராடினால் இழந்த சொத்துகளை மீட்க முடியும் என்பது ஐதீகம்.
துாரம் : ராமேஸ்வரம் கோயிலில் இருந்து வடக்கில் 1 கி.மீ.,துாரத்தில் சம்பை கிராம் வழியாக செல்லும் சுற்றுலா சாலை அருகில் அமைந்துள்ளது
தர்மர் தீர்த்தம்: பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தர்மர், ராமேஸ்வரத்தில் புனித நீராடிய போது சிவனை தரிசித்து நற்பேறு பெற்றுள்ளார். இத்தீர்த்தத்தில் நீராடினால் தீமைகள் விலகி நன்மை கிடைக்கும்.
துாரம் : ராமேஸ்வரம் கோயிலில் இருந்து 3 கி.மீ.,ல் உள்ள கெந்தமாதன பர்வதம் கோயில் பின்புறத்தில் அமைந்துள்ளது..
அர்ச்சுனன் தீர்த்தம்: பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் வில்வித்தையில் சிறந்தவர். போருக்கு முன் இங்கு நீராடிச் சென்றதாக கூறப்படுகிறது. இங்கு நீராடினால் தோல்வி பயமின்றி தொடர்ந்து வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
துாரம் : நகுல தீர்த்தத்தில் இருந்து 200 மீட்டர் துாரத்தில் உள்ளது.
கபி தீர்த்தம்: ராமாயணத்தில் வானுலக தேவர்கள் வானர சேனைகளாக உருமாறி, இலங்கைக்கு பாலம் அமைத்து ராவணனை வதம் செய்தனர். இப்பாவத்தை போக்கி வானர சேனைகளாக கவி குரங்குகள் இங்கு நீராடினர். இதில் நீராடினால் பாவங்கள் போகும் என்பது ஐதீகம்.
சர்வரோக நிவாரண தீர்த்தம்: இலங்கையில் போரிட்டு திரும்பிய ராமருக்கு உடல் ரீதியாக சோர்வு ஏற்பட்ட போது இத்தீர்த்தத்தில் நீராடியதும், உடல் ஆரோக்கியத்துடன் புத்துணர்வு பெற்றார். இங்கு நீராடினால் நோயின்றி உடல் ஆரோக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம்.
துாரம் : ராமேஸ்வரம், தனுஷ்கோடி தேசிய சாலையில் கோயிலில் இருந்து 7 கி.மீ.,ல் உள்ளது
ருண விமோசன தீர்த்தம்: கடனில் சிக்கிய குபேரன், மகாலெட்சுமியிடம் வேண்டிய போது, ருண தீர்த்ததில் நீராடினால் இழந்த செல்வத்தை பெறுவாய் என வரம் கொடுத்தார். பின் குபேரன் ருண தீர்த்ததில் நீராடியதும் கடனில் இருந்து விமோசனம் அடைந்தார். இங்கு நீராடினால் இழந்த செல்வம், சொத்துக்களை மீட்டு செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
துாரம் : ராமேஸ்வரம் கோயிலில் இருந்து 7 கி.மீ.,ல் தங்கச்சிமடம் ஏகாந்தராமர் கோயில் எதிரில் (தேசிய நெடுஞ்சாலை அருகில்) உள்ளது.
அகஸ்தியர் தீர்த்தம்: அகஸ்திய முனிவர் ராமேஸ்வரம் சமுத்திரம் அருகே அமர்ந்து பூஜை செய்து தரிசித்தார். அதன் நினைவாக இங்கு அகஸ்தியர் தீர்த்தம் உருவானது. இத்தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.
துாரம் : ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து வடக்கில் 100 மீட்டர் துாரத்தில் உள்ளது.
ஜாம்பவான் தீர்த்தம்: சுக்ரீவனுடன் கிஷ்கிந்தாவில் இருந்த கரடிகளின் வேந்தன் ஜாம்பவான். சீதையை மீட்பதில் ராமருக்கு முக்கிய பங்காற்றியவர் என ராமாயண வரலாற்றில் கூறப்படுகிறது. இவரை நினைவு கூறும் விதமாக இத்தீர்த்தம் உருவாகியது. இங்கு நீராடினால் வாழ்கையில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
துாரம் : ராமேஸ்வரம் கோயிலில் இருந்து 3 கி,மீ.,ல் கெந்தமாதன பர்வதம் கோயில் செல்லும் சாலை அருகில் உள்ளது.
திரவுபதி தீர்த்தம்: மகாபாரத போர் முடிந்ததும் சபதம் நிறைவேறிய மகிழ்ச்சியில் திரவுபதி இத்தீர்த்த குளத்தில் நீராடியதாக வரலாறு. இங்கு நீராடினால் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பது ஐதீகம்.
துாரம் : ராமேஸ்வரம் கோயிலில் இருந்து வடக்கில் 600 மீட்டர் துாரத்தில் பத்திரகாளியம்மன் கோயில் எதிர்புறம் அமைந்துள்ளது
மற்ற 16 தீர்த்தங்கள் : 1,பரசுராம தீர்த்தம். 2, பனச்சர் தீர்த்தம். 3, நீலகண்ட தீர்த்தம். 4,நாரண தீர்த்தம். 5, நாக தீர்த்தம். 6, மங்கள தீர்த்தம். 7, குமுத தீர்த்தம். 8, ஜடாயு தீர்த்தம். 9, பிரம்ம தீர்த்தம். 10, சுக்ரீவ தீர்த்தம். 11,அமிர்த் வாபி தீர்த்தம். 12, கால சம்ஹார தீர்த்தம். 13, விரேக தீர்த்தம். 14,ஞானவாபி தீர்த்தம். 15, பாபவிமோசன தீர்த்தம். 16, அமிர்த் வாபி தீர்த்தம்.