பதிவு செய்த நாள்
10
ஜன
2019
12:01
திருப்பூர்: உழவுக்கு ஆதாரமான ஏர்க்கலப்பையுடன் கூடிய, 800 ஆண்டு பழமையான அம்மன் சிலை மற்றும் மூன்று தலைப்பலி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. உழவுக்கு உறு துணையாக உள்ள, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக, தைப்பொங்கல் விழா அடுத்த வாரம், கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி – நம்பியூர் ரோட்டில் உள்ள, அளுக்குளி கிராமத்தில், 800 ஆண்டு பழமையான, ஏர்க்கலப்பையுடன் கூடிய அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து, திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த, ரவிக்குமார், பொன்னுச்சாமி, ரமேஷ்குமார், வேலுசாமி ஆகியோர் கூறியதாவது: கொற்றவை, காளி என பண்டைய இனக்குழு மக்களின் வழிபாடு, தாய்த்தெய்வ வழிபாடாக இருந்துள்ளது. அளுக்குளி கிராமத்திலுள்ள செல்லாண்டி அம்மன் கையில் ஏர் கலப்பை காணப்படுகிறது. விவசாயம் செழிக்கும் வகையில், வேளாண் கருவியுடன் காணப்படுவது சிறப்பு.
அதேபோல், அளுக்குளியில், 600 ஆண்டு பழமையான மூன்று தலைப்பலி சிற்பங்கள் உள்ளன. வீரர்கள் எதிரிகளுடன் போர் துவங்குவதற்கு முன், கொற்றவை முன் சென்று, வெற்றி தர வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பிறகு, தம் தலையைப் பலியாக கொடுப்பர். அதே போல், தொற்றுநோய்கள், எதிர்பாராத பஞ்சம், பெருவெள்ளம், குளம், ஏரிகள் உடைந்து ஏற்படும் இயற்கை பேரழிவு என, கிராம நன்மைக்காக வீரர்கள் தலைப்பலி கொடுத்துள்ளனர்.
வலது கையில் சுரிகை வகை குறுவாள், கழுத்தில் கண்டிகை, மார்பில் வீரத்தின் அடையாளமாக சன்ன வீரம், முழங்கையில் கடகவளை, கை, காலில் வீரக்காப்பு, காதணி, இடையில் ஆடை காணப்படுகிறது. சிறிய சிற்பங்கள், 90 செ.மீ., உயரம், 50 செ.மீ., அகலம் உடையதாகும். வீரர்கள் தங்களது இடது கையில் உள்ள குறுவாளைத் தங்களது கழுத்தில் குத்தும் வகையில் உள்ளன. இரு வீரர்களுமே, தங்களது வலது கையை மேலே உயர்த்திய நிலையில் உள்ளனர். இந்த கிராம மக்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன் கீழே கிடந்த இந்த சிற்பங்களை, வாரச் சந்தை நடக்கும் இடத்தில் எடுத்து வைத்து வழிபட்டு வருகின்றனர். தமிழர்களின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் இதுபோன்ற சிற்பங்களை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.