பதிவு செய்த நாள்
10
ஜன
2019
12:01
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே வெள்ளக்கிணறில் தைப்பூச திருவிழாவையொட்டி காவடி தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
தைப்பூச திருவிழாவையொட்டி, முருகனின் ஆறுபடை வீடுகளிலும் சிறப்பு பூஜைகளும், காவடி ஆட்டமும் வெகு விமரிசையாக நடக்கும்.கோவை நகரைச் சுற்றியுள்ள மருதமலை, குருந்தமலை, குமரன் குன்று, அனுவாவி சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, காவடி எடுத்துச் செல்வது வழக்கம்.
பால் காவடி, பன்னீர் காவடி, செலுத்து காவடி, ஆறுமுக காவடி உள்ளிட்ட பல வகை காவடிகளை செய்யும் பணி, துடியலுார் அருகே வெள்ளக்கிணறில் தீவிரமாக நடந்து வருகிறது. தைப்பூச திருவிழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பக்தர்களுக்குத் தேவையான நுாற்றுக்கணக்கான காவடிகள் செய்யும் பணி விடிய, விடிய நடந்து வருகிறது. இதற்காக மூங்கில், மூங்கில் தப்பை, மாம்பலகை, வேங்கை ஆகியவை பயன்படுத்தப் படு ன்றன. காவடி செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் சாமியப்பன் கூறியதாவது:கடந்த, 40 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறேன். காவடிகளின் அளவைப் பொறுத்து, 300 ரூபாயில் இருந்து, 25,000 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம்.
நாங்கள் தயாரிக்கும் காவடிக்கு, கோவை மட்டு மின்றி நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் வரும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தைப்பூச சீசனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவடிகள் செய்து விற்போம். ஆனால், இப்போது, அதிகபட்டமாக, 400 காவடிகளுக்கே ’ஆர்டர்’ வருகிறது.காவடி செய்வதற்கான மூலப் பொருட்களின் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. மேலும் அவை உரிய நேரத்தில் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. குறிப்பாக, மூங்கில் மற்றும் மூங்கில் தப்பைகள் கிடைப்பது அரிதாக உள்ளது. மேட்டுப்பாளை யம், சிறுமுகை, கோவை, சூலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, சேகரித்து வர வேண்டி உள்ளது.வேண்டுதல்களை நிறைவேற்ற விரும்பும் பக்தர்கள், ’செலுத்து காவடி’யை விரதமிருந்து எடுத்துச் செல்வது வழக்கம்.செலுத்து காவடிக்கு மாம்பலகை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில், செய்தால் காவடி உடையாது; உறுதியாக இருக்கும். இந்த ஆண்டு வேங்கை மரத்தில் செய்யப்பட்ட ஆறுமுக காவடி, 29 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. இதை தொழிலாக கருதாமல் இறைப்பணியாக கருதுவதால், காவடி வாங்க வரும் நபர்களிடம் கறாராக பேசி விற்பனை செய்வதில்லை. காவடிக்கு செய்ய வேண்டிய அலங்கார வேலைகளை வாங்கும் நபர்களே அவரவர்களின் வேண்டுதல், ரசனைக்கு ஏற்ற வகையில் அமைத்து கொள்வர். இவ்வாறு, அவர் கூறினார்.