பதிவு செய்த நாள்
13
ஜன
2019
01:01
திருப்பூர்:திருப்பூரில் கட்டுப்பட்டுள்ள திருவள்ளுர் கோவில், வரும், 15ல் திறக்கப்படுகிறது.திருப்பூர் மக்கள் மாமன்றத்தின் வெள்ளி விழா ஆண்டு முன்னிட்டு, திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டு, கோவில் கட்டப்பட்டுள்ளது. நான்கடி உயரத்தில், கையில் எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடியுடன் திருவள்ளுவர் உருவ சிலையும் வைக்கப்பட்டுள்ளது.நான்கடி உயரத்தில் பீடமும், எட்டுக்கு எட்டு அடி பரப்பில் டைல்ஸ் பதித்த கட்டடமும், அதன் மீது இரும்பு கம்பி தடுப்பு மற்றும் கூரையுடன் உலோக கருவறையாக, 2.50 லட்சம் ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ளது. இதற்கான பணி நிறைவடைந்து, வரும், 15ம் தேதி காலை 9:00 மணிக்கு திறப்பு விழா நடக்கிறது.திருப்பூர் மக்கள் மாமன்ற நிர்வாகிகள் சுப்ரமணியம், ராஜா, கிருஷ்ணன் கூறுகையில், திருவள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், திருப்பூரில், கோவில் அமைத்துள்ளோம். இங்கு அவரை வணங்க வருவோர், அதனருகே வைத்துள்ள ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒரு திருக்குறளையும் அதன் விளக்கத்தையும் எழுதிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்குறள் தெரியாதவர் என்றால், அவர்கள் படித்து எழுதும் வகையில், அருகே ஒரு திருக்குறள் நுாலும் வைக்கப்படும் என்றனர்.