பதிவு செய்த நாள்
14
ஜன
2019
01:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வரதராஜப் பெருமாள் கோவில், பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளது. இந்த பெருமாளை, மூன்று ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். பண்டைய காலத்தில் இக்கோவில் மூலவராக இருந்த, ஆதி அத்தி வரதர், அனந்த சரஸ் தீர்த்தத்தில், ஜலசயன கோலத்தில் எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து காட்சி தரும் நிகழ்வு, இந்த ஆண்டு ஜூலையில் நடக்கிறது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், பிரம்மா நடத்திய அசுவமேத யாகத்தில் இருந்துஅவதரித்தார் என, நம்பப்படுகிறது.
பெரும்தேவி தாயார் பிருகு மஹரிஷி நடத்திய புத்திர காமஷ்டி யாகத்தில் அவதரித்தாக வரலாறு.இந்த பெருமாளிடம் நேரடியாக பேசும் பேறு பெற்றவராக, திருக்கச்சி நம்பிகள் திகழ்ந்தார். திருக்குளங்கள்தினமும் சாலை கிணற்றில் இருந்து பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டு வந்து, சேவை செய்து வந்த உடையவர் ராமானுஜர், பெருமாள் உத்தரவின்படிஸ்ரீரங்கம் சென்றதாக கூறப்படுகிறது.இக்கோவிலில் இரு ராஜகோபுரங்கள் உள்ளன. மன்னர்கள் காலத்தில் கிழக்கு ராஜ கோபுரம் தான் பிரதான நுழைவு வாயிலாக இருந்துள்ளது. பின், மேற்கு கோபுரம்வழக்கத்திற்கு வந்தது.கோவிலில் மாட வீதி பிரகாரம், ஆழ்வார்பிரகாரம், சேனை முதன்மையார் பிரகாரம், வைய மாளிகை பிரகாரம், ஆளவந்தார் பிரகாரம் என, ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
இந்த கோவிலில் அனந்தசரஸ், பொற்றாமரை என, இரு திருக்குளங்கள் உள்ளன. இக்கோவிலில் தற்போது மூலவராக அருள்பாலித்து வரும் வரதராஜப்பெருமாள், தேவராஜ சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். இப்பெருமாள் பிரதிஷ்டை செய்த பின், அத்தி மரத்தால் ஆன, ஆதி அத்தி வரதர் திருஉருவச்சிலை, கோவில் வளாகத்தில் உள்ள, அனந்தசரஸ் திருக்குளத்தில் அமைந்துள்ள, நான்கு கால் மண்டபத்தில்,ஜலசயன கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.இந்த மண்டபத்தின் கீழ், உள்ளே செல்வதற்கு படிகள்; சுற்றி பார்ப்பதற்கு வழி; நான்கு புறமும் கல் துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் வெளியே எழுந்தருளும் அத்தி வரதர், 1979ம் ஆண்டு ஜூலை, 2ல் எழுந்தருளினார்.வசந்த மண்டபம்அன்று, அத்தனை காலம் நீரில் இருந்ததால், மேனியை சுத்தம் செய்து, ஆகம விதிப்படி பூஜைகள் முடிந்த பின் கோவில் வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காககாட்சியளித்தார். மேலும், 48 நாட்கள் வெளியில் இருக்கும் அத்தி வரதர் முதல், 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த, 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பார்.தகவல் தொடர்பு வளர்ச்சி அடையாத அன்றைய காலத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.நடப்பாண்டு நடக்கும் இந்த நிகழ்சியில், கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படும். மேலும், வசந்த மண்டபத்தில் அவ்வளவு மக்களை சமாளிக்க முடியுமா என, தெரியாது. அதற்கு பதில், கோவில் வளாகத்தில் வேறு இடத்தில், அத்தி வரதர் வைத்து பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வரா என்பது இனி மேல் தான் முடிவு செய்யப்படும் என, கூறப்படுகிறது.
திருவையாறு பஞ்சாங்கம் வெளிவந்த பின் தான், அத்தி வரதரை வெளியே எடுப்பதற்கான நேரம் முடிவு செய்யப்படும். பின் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விபரம் தெரிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து, மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.ந. தியாகராஜன், கோவில் செயல் அலுவலர்பெரும் புண்ணியம்!சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த, கோ.நாராயணன் என்பவர் கூறியதாவது:பெருமாள் கோவில் குளத்தில் இருந்து, ஆதி அத்தி வரதர் வெளியே எழுந்தருளும் போது, எனக்கு வயது, 25. அன்று இரவு தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரை வெளியே எடுத்தனர். பின், குளத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்தில், வீற்றிருந்த அத்தி வரதர் வெளியே வந்தார். பூஜைகள் முடிந்து மறு நாள் வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாள் சயன கோலத்தில் காட்சியளித்த, 24 நாட்களில் கூட்டம் அந்த அளவுக்கு கிடையாது.அதன் பின், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது தொலை தகவல் தொடர்பு வசதி குறைவு. வெயில் காலம் என்பதால், தினமும் தரிசனத்திற்காக வந்தவர்கள் தாகத்தில் அவதிப்பட்டனர். அவர்களுக்கு அப்போதே, 10 பைசாவுக்கு தண்ணீர் விற்பனை செய்தனர். 48 நாட்கள் முடிந்து, மீண்டும் குளத்தில் எழுந்தருள செய்த பின், நல்ல மழை பெய்தது.லட்சார்ச்சனை கட்டணம் அப்போதே, 100 ரூபாய் வசூல் செய்தனர். இந்த ஆண்டு வெளியில் வரும் அத்தி வரதரை பார்ப்பதற்கு கூட்டம் பல மடங்கு அதிகமாக இருக்கும். அத்தி வரதரை ஒரு முறை பார்ப்பதே பெரும் புண்ணியம்.இவ்வாறு அவர் கூறினார்.