பதிவு செய்த நாள்
16
ஜன
2019
01:01
தொண்டாமுத்தூர்:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தேர்திருவிழா துவக்கமாக, கொடிமரத்தில் முருகனின் சேவற்கொடி ஏற்றப்பட்டது.தை மாத பூசம் நட்சத் திரத்தில், வள்ளி தேவியை, சுப்ரமணியசுவாமி மணம் புரிந்தார். இத்தினத்தை தைப்பூசத் திருவிழாவாக, ஆண்டுதோறும் பக்தர்கள் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்றுமுன்தினம் (ஜன., 14ல்)மாலை வாஸ்து சாந்தி மற்றும் விநாயகர் பூஜையோடு விழா துவங்கியது. காலை, 4:30 மணிக்கு கோபூஜை நடந்தது. 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
சேவற்கொடி ஏற்றல்காலை 8:00 மணிக்கு, கோவில் முகப்பிலுள்ள கொடிமரத்தின் முன், மங்கல வாத்தியங்கள் மற்றும் வேதமந்திரங்கள், பக்தர்களின் அரோகரா கோஷத்துடன், யாகசாலை முன் சேவற்கொடி பொறிக்கப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட விநாயகர் மூஷிக வாகனத்தில் முன்வர, வீரபாகு, கேடய வாகனத்திலும், உற்சவமூர்த்தியான சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை சமேதரராய் கற்பகவிருட்ச வாகனத்திலும் எழுந்தருளி, கோவிலை சுற்றி சுவாமி வீதி உலா வந்தனர்.காலை, 8:30 மணிக்கு பூஜிக்கப்பட்ட, 25 மீட்டர் காடா துணியால் தயாரிக்கப்பட்டிருந்த கொடியை சிவாச்சாரியார்கள் தாங்கி வந்து, கொடிமரத்தில், கொடி மங்கல நாண்களால் சேவற்கொடி ஏற்றப்பட்டது.
அதன்பின், திருத்தேரில் கொடிக்கம்பம் நடப்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோ கரா, முருகனுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பினர். மாலை, 5:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி அனந்தாசனத்தில் திருவீதியுலா வந்தார்.
பத்து நாட்கள் விழா நேற்று (ஜன., 15ல்) தைப்பொங்கல் தினம் என்பதால், திரளான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமியை தரிசித்தனர். தைப்பூசத் தேர்த்திருவிழா தொடர்ந்து, பத்து நாட்கள் நடக்கவுள்ளது.வரும் 21ல் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அன்று காலை, 9:00 மணிக்கு கோவில் மகாமண்டபத்தில் சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பகல், 1:00 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுத்து திருவீதியுலா வருகிறது.