பதிவு செய்த நாள்
21
ஜன
2019
11:01
பழநி : தைப்பூச விழாவையொட்டி பழநிக்கு வருகை புரிந்த பக்தர்களால் நேற்று நகரமே ஸ்தம்பித்தது. 6 முதல் 7 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தைப்பூச விழா பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜன.,15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவை முன்னிட்டு சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும், ஆட்டம் பாட்டத்துடன் வருகை தருகின்றனர். ஒட்டன்சத்திரம்-- பழநி ரோட்டில் சாரை சாரையாக அணிவகுத்து வந்தனர். காரைக்குடி நகரத்தார் ஏராளமான காவடிகளுடன் வைரம் மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட வைரவேலை பாரம்பரிய மரப்பெட்டியில் வைத்து மாட்டுவண்டியில் கொண்டு வந்தனர். பக்தர்கள் கூட்டத்தால் அடிவாரம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநி இடும்பன்குளம், சண்முகநதியில் ஏராளமான பக்தர்கள் ஷவரில் குளித்தனர். மலைக்கோயிலில் வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் 6 முதல் 7 மணி நேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். அடிவாரம் பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.