பதிவு செய்த நாள்
22
ஜன
2019
03:01
பழநி : தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநியில் குவிந்த பக்தர்களால் ரயில்கள் ஹவுஸ் புல் ஆகி நிற்ககூட இடம்கிடைக்காமல் பாதயாத்திரை பக்தர்கள் சிரமப்பட்டனர்.
பழநியில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரை, சென்னை, திருச்செந்தூருக்கு இயக்கப்பட்ட ரயில் தற்போது பாலக்காடு, திருவனந்தபுரம், கோவை பகுதிகளில் இருந்து இயக்கப் படுகின்றன. பழநியில் இருந்து ரயில் இல்லாத காரணத்தால் சாதரண நாட்களிலும் இடம் கிடைக்காமல் உள்ளூர் மக்கள், கோயிலுக்கு வரும் பக்தர்கள், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.
தற்போது தைப்பூச விழாவை முன்னிட்டு மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் பாதயாத்திரையாக பழநிக்கு வந்தவண்ணம் உள்ளனர். ரயில் கட்டணம் குறைவு காரணமாக இவர்களில் பெரும்பாலோர் ரயிலில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.இதனால் பாலக்காடு- திருச்செந்தூர், கோவை- - மதுரை ரயில்கள் நிரம்பி வழிகின்றன. நேற்று (ஜன., 21ல்) காலை சிறப்பு ரயில் பழநியில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டது.
இருப்பினும் பக்தர்கள், திண்டுக்கல், மதுரை வரை நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே பழநியில் இருந்து கிளம்பி திண்டுக்கல், மதுரை, சென்னைக்கு நிரந்தர ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.