பதிவு செய்த நாள்
22
ஜன
2019
03:01
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் உள்ள முருகன் கோவில்களில், தைப் பூசத்தை முன்னிட்டு சிறப்பு அலங்கார பூஜை, தேரோட்டம் மற்றும் அன்னதானம் நடந்தது.
தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, பழநி முருகனுக்கு மாலை யணிந்த பக்தர்கள், காவடியுடன் பாதயாத்திரை துவக்கியுள்ளனர்.
கிணத்துக்கடவு பொன்மலை முருகன் கோவிலில், நேற்று (ஜன., 21ல்)தைப்பூசத் திருவிழா, காலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் துவங்கியது.
ஏராளாமான பக்தர்கள் மலைக்கோவிலில் முருகப்பெருமானை வழிபட்டனர். கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் உள்ள, முத்துமலை முருகன் கோவிலில், காலை, மதிய வேளைகளில் சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.கோவை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் முருகனை அரோகரா கோஷமிட்டு, வழிபட்டனர். மாலை, 4:00 மணிக்கு தேரில் சுவாமி வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை, 9:00 முதல், மாலை, 6:00 மணி வரை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.நெகமம், ரங்கம்புதூர் ரோட்டில் உள்ள சின்னண்ணன்சுவாமி கோவில், காளியப்பம் பாளையம் தங்கவேல்அய்யன் கோவில், பல்லடம் ரோடு, மாயாண்டீஸ்வரர் கோவில்களில், தைப்பூசத்தை முன்னிட்டு, அதிகாலை முதல் சிறப்பு அலங்கார, அபிேஷக பூஜை நடந்தது.
மூன்று கோவில்களிலும், காலை முதல், மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், காலை, 7:30 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது. மாலை, 6:30 மணிக்கு சுவாமி திருவீதியுலா நடந்தது.