பதிவு செய்த நாள்
22
ஜன
2019
03:01
வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழாவையொட்டி, நேற்று (ஜன., 21ல்) பறவைக்காவடி மற்றும் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 14ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று முன் தினம் (ஜன., 20ல்) மாலை, 4:30 மணிக்கு முருகன், வள்ளி தெய்வாணை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.நேற்று (ஜன., 21ல்) காலை, 10:00 மணிக்கு அன்னதான விழாவை எம்.எல்.ஏ., கஸ்தூரி, கூட்டுறவு நகர வங்கி தலைவர் அமீது, துணைத்தலைவர் மயில்கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து, நல்லகாத்து ஆற்றில் இருந்து பக்தர்கள் அலகு பூட்டியும், பறவைக்காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். கோவிலில் நாள் முழுவதும் சிறப்பு வழிபாடு நடந்தது.மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை தைப்பூச விழாக் குழுவினர் செய்திருந்தனர்.