பதிவு செய்த நாள்
23
ஜன
2019
02:01
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில் உள்ள ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் (ஜன., 21ல்) பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இரவு மின் விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், வாத்தியங்கள் முழங்க முருகன் நகர் வலம் வந்தார். தேர்பவனி, சென்னை சாலை வழியாக, கிருஷ்ணகிரி ரவுண்டானா மற்றும் காந்திசாலையில் உள்ள பெருமாள் கோவில் வந்தது. உப்பு, மிளகைத்தூவி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெங்களூரூ சாலை வழியாக, தேர் சென்று, முருகன் கோவிலை வந்தடைந்தது.
* தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில், வேலவன் குன்று வேல்முருகன் கோவில் உள்ளது. இந்நிலையில், தைப்பூசத்தையொட்டி, நேற்று (ஜன., 22ல்), முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜை நடந்தது. மதியம், 1:30 மணிக்கு துவங்கிய தேரோட்டத்தை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பஸ் ஸ்டாண்ட், ரங்கம்மா பேட்டை, ஜீவா நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக, வந்து இறுதியில், கோவிலில் நிலை நிறுத்தப்பட்டது.