திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண மஹோத்ஸவம் நிறைவடைந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஆண்டாளான ஸ்ரீகோதை நாச்சியார் திருக்கல்யாண மஹோத்ஸவம் ஜன.19ல் துவங்கியது. முதலாம் நாளில் ஆண்டாள் பெரிய சன்னதிக்கு எழுந்தருளி பெரியபெருமாளிடம் விடை பெறுதலும், இரண்டாம் நாளில் தைலம் திருவீதி சுற்றல், தைலம் சாத்துதல் நவகலஸ அலங்கார ஸெளரி திருமஞ்சனமும், மூன்றாம் நாளில் ஆண்டாள் உச்சிக்கொண்டை சேவையும், நேற்று முன்தினம் மாலை ஆண்டாள் தைலக் காப்பு மண்டபம் எழுந்தருளலும், முத்துக்குறி பார்த்தலும் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு பெருமாள் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து பெரியாழ்வாரை எதிர் கொண்டு அழைத்தலப்பு நடந்தது. மாலை 4:30 மணிக்கு சீர்வரிசை பொருட்களுடன் ஆண்டாள் திருவீதி உலா வந்தார். பின்னர் ராஜகோபுரம் முன் ஊஞ்சலில் பெருமாள்-ஆண்டாள் மாலை மாற்றுதல் நடந்தது. தொடர்ந்து திரிபிடி சுத்துதல் நடந்தது. பின்னர் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளி 7:32 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு 9:45 மணிக்கு கல்யாண திருக்கோலத்தில் பெருமாள், ஆண்டாள் திருவீதி புறப்பாடு நடந்தது.