பழநி: தைப்பூச விழாவில் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளியை முருகர் திருமணம் செய்த பின், தெய்வானையை சமாதானம் செய்யும் திருவூடல் உற்ஸவ விழா நடந்தது. பழநி கிழக்கு ரதவீதியில் உள்ள பெரிநாயகியம்மன் கோயிலில் கடந்த ஜன.,15முதல் தைப்பூசவிழா நடக்கிறது. விழாவில் ஜன.,20ல் திருக்கல்யாணமும், ஜன.,21ல் தைப்பூச தேரோட்டமும் நடந்தது.
விழாவில் நேற்றுமுன்தினம் பெரியதங்க மயில் வாகனத்தில் சுவாமிபுறப்பாடு நடந்தது. நேற்று பத்தாம்நாள் நிகழ்ச்சியாக திருவூடல் உற்ஸவம் நடந்தது. வள்ளியை முருகன் திருமணம் செய்த காரணத்தினால், கோபமடைந்த தெய்வானை சன்னதி கதவை சாத்தியதும், அவரை நாரதர், வீரபாகு சமரசம் செய்வது போன்றும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, முத்துக்குமாரசுவாமி ஒரு சப்பரத்திலும், தனியாக தெய்வானை ஒருசப்பரத்தில் அருள்பாலித்தனர்.