பதிவு செய்த நாள்
26
ஜன
2019
01:01
உடுமலை:ஆல்கொண்டமால் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட கன்றுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.உடுமலை சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற, ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. தை முதல் நாளில், மாடுகள் ஈன்றெடுக்கும் கன்றுகளை, கோவிலுக்கு காணிக்கையாக வழங்குகின்றனர்.இவ்வாறு, காணிக்கையாக பெறப்படும் காளை கன்றுகளை தங்கள் கிராமங்களில், சலகெருதாக வளர்க்க, அப்பகுதி மக்கள், பெற்றுச்செல்வார்கள். பிற கன்றுகள், இந்து அறநிலையத்துறை சார்பில், கோசாலைக்கு அனுப்பப்பட்டு வந்தது.இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக, கைவிடப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், 30 கன்றுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு நேற்று வழங்கப்பட்டது. அடிவள்ளி கிராமத்துக்கு ஒரு காளை கன்று சலகெருதாக பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரன், கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.காணிக்கையாக பெறப்படும் கன்றுகளை, இந்து அறநிலையத்துறையினர் பராமரிக்காத நிலையில், பராமரிப்பு கட்டணம் வசூலிக்க பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பக்தர்கள் கூறியதாவது: ஆல்கொண்டமால் கோவிலுக்கு, கன்றுகளை தானமாக வழங்க, ஆயிரம் ரூபாயை, பராமரிப்பு கட்டணமாக இந்து அறநிலையத்துறையினர் வசூலிக்கின்றனர். முன்பு, கோசாலைகளுக்கு, கன்றுகளை அனுப்புவதற்கான செலவுக்கு, இத்தொகை பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.கடந்த சில ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு கோவில் வளாகத்திலேயே கன்றுகளை இலவசமாக வழங்கி விடுகின்றனர். இந்து அறநிலையத்துறைக்கு எவ்வித செலவும் இல்லை. எனவே, அடுத்த திருவிழாவில் இருந்து கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும்.இவ்வாறு, கூறினர்.