பதிவு செய்த நாள்
27
ஜன
2019
10:01
திருமங்கலம்: மதுரை, வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில், தமிழகம் முழுவதும், முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தும் குடும்பத்தார் இணைந்து, 200 கிடா, 200 சேவல் பலியிட்டு, பிரியாணி படைத்து வழிபாடு நடத்தினர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இருந்து, 27 கி.மீ.,யில் உள்ளது கள்ளிக்குடி வடக்கம்பட்டி கிராமம். இங்கு, பல நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த, முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது.வடக்கம்பட்டி கிராம மக்கள், வறுமையில் உழன்ற காலம் அது. 1935ம் ஆண்டு இக்கிராமத்தைச் சேர்ந்த சுப்பா நாயுடு கனவில் தோன்றிய முனியாண்டி, என் பெயரில், சேவை மனப்பான்மையுடன் பொதுமக்கள் பசி மற்றும் தாகம் தீர்க்கும் தொழில் செய்யுங்கள்; நான் அருள்புரிகிறேன் என, அருளாசி வழங்கினார்.
இதையடுத்து, சுப்பா நாயுடு, காரைக்குடியில், முனியாண்டி விலாஸ் ஓட்டலை துவங்கினார். அடுத்து, தமிழகம் மட்டுமில்லாமல், பல மாநிலங்களிலும் ஓட்டல்கள் துவக்கப்பட்டன. சென்னையில் மட்டும், 40 முனியாண்டி விலாஸ்கள் உள்ளன.
பிரான்ஸ், கனடா, துபாய், சீனா என, உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த ஓட்டல்கள் பரவி உள்ளன. ஓட்டல்களை நடத்துவோர், பணிபுரிவோர் பெரும்பாலும், வடக்கம்பட்டியை பூர்வீகமாக கொண்டவர்கள். இப்படி ஓட்டல் தொழிலில் வளம் கொழித்த வடக்கம்பட்டி, வறுமையிலிருந்து மீண்டு, செல்வ செழிப்பு மிக்க கிராமமாக மாறியது.
10 ஆயிரம் பேர்: இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஆண்டுதோறும், முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் ஐந்து நாள் ஓட்டல்களை மூடி, குடும்பத்துடன் வடக்கம்பட்டி வந்து விழா எடுக்கின்றனர். தை இரண்டாவது வியாழன் துவங்கும் விழா, சனிக்கிழமை இரவு நிறைவு பெறும். ஆண்டுதோறும், 10 ஆயிரம் பேர் கூடுகின்றனர். வியாழன் மாலையே அன்னதானம் துவங்கும். சனிக்கிழமை இரவு வரை, ஏழு முறை அன்னதானம் நடக்கிறது. ஒவ்வொரு முறையும், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சாப்பிடுகின்றனர்.சனிக்கிழமை காலை மட்டும் பிரியாணி விருந்து நடக்கிறது. விழா செலவை, அனைவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஓட்டல் துவங்கியது முதல் தற்போது வரை, தினசரி விற்பனையில், முதல் பில்லை, முனியாண்டிக்கு எடுத்து வைக்கும் வழக்கம் அனைவரிடமும் உள்ளது. இப்படி பல லட்சம் பணம் சேருவதால், விழாவை மிகவும் சிறப்பாக நடத்துகின்றனர்.முனியாண்டிக்கு பலரும், காணிக்கையாக, கிடா அல்லது சேவல் வழங்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது, 200க்கும் மேற்பட்ட கிடாக்களும், சேவல்களும் காணிக்கையாக கிடைக்கின்றன. வெள்ளிக்கிழமை இரவு, 11:00 மணிக்கு சக்தி கிடா வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து அத்தனை கிடாக்களும், சேவல்களும், அதிகாலை, 4:00 மணிக்குள் பிரியாணியாகி விடுகின்றன. இந்த பணிகளில் மட்டும், 75 பேர் ஈடுபடு கின்றனர். குறைந்தது, 2,000 கிலோ ஆட்டுக்கறி, 2,000 கிலோ அரிசி போட்டு பிரியாணி செய்கின்றனர்.இவ்வளவு பெரிய சமையலிலும் உப்பு, காரம் சரியாக இருக்கிறதா என பார்ப்பதில்லை. பிரியாணியை சுவாமிக்கு படைத்து, பூஜை செய்த பின்னரே சாப்பிடுகின்றனர். முனியாண்டி சுவாமி சுத்த சைவம். எனவே, கோவிலில், காவல் தெய்வமாக இருக்கும் கருப்பசாமிக்கு பிரியாணி, மது, சுருட்டு படைத்து வழிபாடு நடத்துகின்றனர். வடக்கம்பட்டியை சுற்றிலும் வசிக்கும், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பிரியாணி விருந்தில் பங்கேற்கின்றனர். அதிகாலை, 5:00 மணிக்கே பிரியாணி விருந்து துவங்கி விடுகிறது. நடப்பு ஆண்டு, 84வது அன்னதான திருவிழா நிறைவு பெற்றுள்ளது.
திருமணங்கள் நிச்சயம்: உலகம் முழுவதும் இருந்தும், முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களின் குடும்பங்கள் ஒரே இடத்தில், மூன்று முதல் ஐந்து நாள் வரை கூடுவதால், வடக்கம்பட்டியிலேயே, பெண் பார்க்கும் படலம், மாப்பிள்ளை பார்க்கும் படலம் முடிந்து திருமணம் உறுதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு, 10 முதல், 25 திருமணங்கள் வரை, இந்த விழாவில் நிச்சயமாகின்றன.