பதிவு செய்த நாள்
28
ஜன
2019
03:01
மணலி: சர்வசக்தி மாரியம்மன் கோவிலில், 30 லட்சம் ரூபாய் செலவில், மூன்று சன்னிதிகள் கட்டப்படுவதற்கான பூமி பூஜை, விமரிசையாக நடைபெற்றது.
மணலி, மாத்தூர் சர்வசக்தி மாரியம்மன் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் வளாகத்தில், பரிவார மூர்த்திகளான பெருமாள், முருகன், அய்யப்பன் சுவாமிகளுக்கான தனி சன்னிதிகள், 30 லட்சம் ரூபாய் செலவில் கட்ட, கோவில் பக்தஜன சபா அறக்கட்டளை சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கான முதற்கட்ட பணியாக, நேற்று முன்தினம் (ஜன., 26ல்), பூமி பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு, கோவிலில் கணபதி ஹோமம், வாஸ்து பூஜை ஆகியவை நடைபெற்றன.
பின், கலசம் நிர்மாணிக்கப்பட்டு, யாகம் வளர்க்கப்பட்டது. செங்கலில் மஞ்சள், குங்குமம் பூசப்பட்டு, சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன.
பூமி பூஜை நடைபெற தெரிவு செய்யப்பட்ட இடங்களில், செப்பு தகடுகள், நவதானியங்கள், மலர்கள், பால் மற்றும் புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு, பூமி பூஜை நடைபெற்றது. இதில், பங்கேற்ற ஏராளமான பக்தர்கள், கோவிந்தா... அரோகரா... சாமியே சரணம் அய்யப்பா... என, முழங்கி, பக்தி பரவசத்தில் முழங்கினர்.
பக்தர்களுக்கு, பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.