பதிவு செய்த நாள்
28
ஜன
2019
06:01
கடம்பத்துார்: இந்து சமய அறநிலையத் துறையினரின் அலட்சியப் போக்கால், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, செஞ்சி சிவன் கோவில், இடிந்து விழும் நிலையில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது செஞ்சி ஊராட்சி. இங்கு, இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான, ஜெனமே ஜெய ஈஸ்வரன் கோவில் உள்ளது. ௧ ஏக்கர் பரப்பு கொண்டது.
பல்லவர் காலத்தில், இக்கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலை பராமரிக்க, 6.40 ஏக்கர் விவசாய நிலம் சொந்தமாக உள்ளது. இதையும், இந்து அறநிலையத் துறையினர் நிர்வகித்து வந்தாலும், போதிய வருவாய் கிடைக்காமல், கோவில் நலிவடைந்து விட்டது. வருவாய் இல்லாத கோவில்களுக்கு, இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மூலம், 2001ம் ஆண்டு, இங்கு இலவச மின்சாரம் கிடைத்தது. கோவிலின் மேற்கே விநாயகர், முருகன் சன்னிதிகள் உள்ளன. வடக்குப் பகுதியில் இருந்த காமாட்சி அம்மன் சன்னிதி இடிந்து விழுந்து, முற்றிலும் சேதமாகி, மேற்கூரை இல்லாது உள்ளது. தற்போது, மாடு கட்டும் தொழுவமாகிவிட்டது. இங்கிருந்த அம்மன் சிலை, கோவில் மண்டபத்திற்குள் வைக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சுவர் முழுவதும் பாழடைந்து, விரிசல் ஏற்பட்டு உள்ளது. கோவில் கோபுரத்தில், செடிகள் வளர்ந்து, கட்டடத்தை சேதப்படுத்தி வருகின்றன. இந்து அறநிலையத் துறையினர் அலட்சியத்தால், கோவில் முற்றிலும் பாழடைந்து, இடிந்து விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. கோவில் சுவரில் உள்ள, கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ள வரலாற்று செய்திகளும், அழிந்து வருகின்றன. எனவே, இந்து சமய அறநிலையத் துறையினர், சேதமடைந்த கோவிலைப் புனரமைப்பு செய்து, கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என, செஞ்சி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.