பதிவு செய்த நாள்
30
ஜன
2019
02:01
விருத்தாசலம்:விருத்தாசலம் செல்லியம்மன் கோவில் செடல் திருவிழாவில், கிரேனில் 50 அடி உயரத்தில் தொங்கியபடி விமான அலகு அணிந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு, மணிமுக்தாற்றங்கரை செல்லியம்மன் கோவிலில் கடந்த 22ம் தேதி காப்பு கட்டப்பட்டது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று செடல் திருவிழாவையொட்டி, செல்லியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பகல் 11:30 மணிக்கு மேல், மணிமுக்தாற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி, செடலணிந்து ஊர்வலமாக வந்தனர்.அதில், பக்தர்கள் 6 பேர், விமான அலகு அணிந்து, கிரேனில் 50 அடி உயரத்தில் தொங்கியபடி மணிமுக்தாற்றில் இருந்து மேம்பாலம், பாலக்கரை, கடலுார் ரோடு வழியாக கோவில் வரை ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகர் கோவில் உற்சவத்தை முன்னிட்டு, இன்று காலை 9:00 மணிக்கு மேல், பகல் 11:00 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.