பதிவு செய்த நாள்
01
பிப்
2019
12:02
திருப்பதி: ஆந்திர தலைநகர் அமராவதியில், 150 கோடி ரூபாயில், ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, நேற்று நடந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், நாடு முழுவதும் பல இடங்களில் ஏழுமலையான் கோவில்களை அமைத்து வருகிறது. சமீபத்தில், தமிழகத்தின் கன்னியாகுமரியில் ஏழுமலையான் கோவில், பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாதிலும், மார்ச்சில், ஏழுமலையான் கோவில் திறக்கப்பட உள்ளது. அதேபோல், ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியில் உள்ள வெங்கடபாளையம் அருகில், ஏழுமலையான் கோவில் கட்ட, மாநில அரசு, தேவஸ்தானத்திற்கு, 25 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கீடு செய்தது. அதில், 150 கோடி ரூபாய் செலவில், ஏழுமலையான் கோவில் கட்ட, தேவஸ்தானம் முடிவு செய்தது. அதற்கான பூமி பூஜை, நேற்று காலை நடந்தது. ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு, ஏழுமலையான் கோவில் கருவறை அமைய உள்ள நிலத்தை, ஏர் கலப்பையால் உழுது, நவதானியம் விதைத்து, பூஜை நடத்தினார். இதன்பின், செய்தியாளர்களிடம், சந்திரபாபு நாயுடு கூறியதாவது: கடந்த, 2003ல், திருமலை மலைப் பாதையில் நடந்த குண்டு வெடிப்பிலிருந்து, ஏழுமலையான் என்னை காபாற்றி, மறுஜென்மம் அளித்துள்ளார். தினசரி, 10 நிமிடம், ஏழுமலையானை வழிபட்டு வருகிறேன். அமராவதியில் கோவில் கட்டும் பணி, இரண்டு ஆண்டுகளில் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.