புதுடில்லி: ‘கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 – 50 வயதுள்ள பெண்களையும் அனுமதிக்க வேண்டும்’ என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுஆய்வு மனுக்கள் பிப். 6ல் விசாரிக்கப்பட உள்ளன.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 – 50 வயதுள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, கடந்தாண்டு, செப்., 28ல் தீர்ப்பு அளித்தது. ‘சபரிமலை ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்’ என, ஐந்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு, பல்வேறு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. இதற்கிடையே, இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, 48 மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ‘இந்த மறுஆய்வு மனுக்கள், இந்தாண்டு, ஜன., 22ல் விசாரிக்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டிருந்தது. நீதிபதி, இந்து மல்ஹோத்ரா, மருத்துவ விடுப்பில் சென்றதால், விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், ஆர்.எப். நாரிமன், ஏ.எம். கல்வின்கர், டி.ஒய். சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா அமர்வு, வரும், 6ல் இந்த மனுக்களை விசாரிக்கும்’ என, அறிவிக்கப்பட்டு உள்ளது.