முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம்இருந்து பெற்று பிதுர்தேவதைகளிடம் வழங்குபவர்சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனைநோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெறமுடியும்.
பிள்ளைக்குரிய முழு தகுதி எது? கிருதயுகம், திரேதாயுகங்களில் வருஷதிதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். அந்த யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்தால் இந்நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது. துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டனர். ஆனால், சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும், ஆசியளிப்பதாகவும் சாஸ்திரநூல்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகிவிட முடியாது. பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்குப் பிறகும் பிதுர்கடனை முறையாகச் செய்யவேண்டும். தனது பித்ருக்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று எவன் நினைக்கிறானோ அவன் புத்தியில்லாத மூடனாவான் என்று கடோபநிஷதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் கூறுகிறார்.