பதிவு செய்த நாள்
05
பிப்
2019
03:02
மோகனூர்: தை அமாவாசையை முன்னிட்டு, காவிரி ஆற்றில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து, ஏராளமான பொதுமக்கள் வழிபட்டனர்.
தை மாதம், திங்கள் கிழமை, திருவோண நட்சத்திரத்தில் வரக்கூடிய அமாவாசையானது, மிகச்சிறந்த அமாவாசையாக கருதப்படுகிறது. இந்த நாளில், இறந்துபோன நம் முன்னோர் களுக்கு திதி கொடுத்து வழிபட்டால், குடும்பத்தில் சுபிட்சம் நடக்கும் என்பது ஐதீகம். அதன்படி, மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் காவிரி ஆற்று படித்துறையில், நேற்று (பிப்., 3ல்) அதிகாலை முதலே, ஏராளமான மக்கள் குடும்பத்தினருடன் வந்து, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
அதற்காக, வாழை இலையில், தேங்காய், பழம், பச்சரிசி, பருப்பு, புளி, காய்கள் வைத்தும், அரிசி மாவில் உருவங்கள் பிடித்தும், முன்னோர்களை நினைத்து திதி கொடுத்தனர். மோகனூர், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, வளையப்பட்டி என, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
* ப.வேலூர், காசிவிஸ்வநாதர் காவிரிக்கரையில், 300க்கும் மேற்பட்டோர், தங்கள் முன்னோர் களுக்கு பிண்டம் வைத்து, தர்ப்பணம் செய்து வழிபட்டு, காவிரியில் புனித நீராடினர். காவிரிக் கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள மக்கள், தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.