கிருஷ்ணகிரி: கோதண்டராமர் சிலை மார்க்கண்டேய நதியை கடப்பதில் இரண்டாவது நாளாக சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலம் ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.
சிலை செய்ய 64 அடி உயரம் 26 அடி அகலமுள்ள பாறை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலையில் இருந்து 350 டன் எடையில் வெட்டி எடுக்கப்பட்டது. இதில் முகம் மற்றும் இரண்டு கைகள் வடிவமைத்து நவ. 7ல் 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் வைத்து எடுத்து செல்லப்பட்டது. ஜன. 16ல் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது. குருபரப்பள்ளியில் உள்ள மார்க்கண்டேய நதியில் அமைத்த தற்காலிக சாலையில் நேற்று முன்தினம் லாரி கடக்க முடியாததால் மீண்டும் கற்களை கொட்டி சாலையை சரி செய்தனர்.நேற்று மதியம் 2:45 மணிக்கு நான்கு இன்ஜின்கள் பொருத்தப்பட்டு லாரி மீண்டும் புறப்பட்டது.ஆனால் சாலை முடியும் இடத்தில் மேடாக இருந்ததால் அதை கடக்க முடியாமல் லாரி நின்றது. இதனால் இரண்டாவது நாளாக கோதண்டராமர் மார்க்கண்டேய நதியை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சாலையை உயர்த்துவதா அல்லது கூடுதல் இன்ஜின்கள் பொருத்த வேண்டுமா என சிலை எடுத்துச் செல்லும் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.