பதிவு செய்த நாள்
06
பிப்
2019
12:02
புதுடில்லி: ஒடிசா மாநிலம், புரியில் உள்ள, ஜகன்னாதர் கோவிலில் உள்ள வசதிகள் குறித்தும், பக்தர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், நேரில் ஆய்வு செய்யும்படி, அமிகஸ் கியூரி எனப்படும், நீதிமன்றத்துக்கு உதவும் வழக்கறிஞருக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, புரியில், பிரசித்தி பெற்ற ஜகன்னாதர் கோவில் உள்ளது. இங்கு பக்தர்களுக்கு போதிய வசதி இல்லாதது குறித்தும், கோவில் நிர்வாகிகளால், பக்தர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி, ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த கோவிலில், பக்தர்கள் வரிசையில் வரும் வகையில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என, அமிகஸ் கியூரி எனப்படும், நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர், ரஞ்சித் குமார் கூறினார்.இந்தக் கோவிலின் வடிவமைப்பு வித்தியாசமானது. அதனால், மற்ற கோவில்களைப் போல, வரிசை முறை அமல்படுத்த இயலவில்லை. இது குறித்து, அமிகஸ் கியூரி நேரில் பார்வையிட வேண்டும் என, ஒடிசா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.இதையடுத்து, நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, அமிகஸ் கியூரிக்கு, அமர்வு உத்தரவிட்டது. வரும், 22 - 23ம் தேதிகளில் ஆய்வு செய்வதாக, ரஞ்சித் குமார் கூறினார். இதையடுத்து, வழக்கின் விசாரணை, பிப்., 27க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.