பதிவு செய்த நாள்
11
பிப்
2019
04:02
ராசிபுரம்: திருப்பதி ரத சப்தமி விழாவுக்கு, ராசிபுரத்தில் இருந்து ஐந்து டன் பூ மாலைகள் அனுப்பப்படுகின்றன.
ஆந்திர மாநிலம், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஆண்டுதோறும் ரத சப்தமி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி சேலம், கொங்கணாபுரத்தை சேர்ந்த திருமலை
திருப்பதி ஸ்ரீமன்நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பாக டன் கணக்கில் பூமாலைகள் அனுப்பப்படும். இந்த மாலைகள், திருப்பதியில் உள்ள தங்க கொடிமரம், ரதம்,
உள்பிரகாரங்களை அலங்கரிக்க பயன்படுத்தப்படும். நாளை (பிப்., 12ல்), ரத சப்தமி விழா நடப்பதையொட்டி, நேற்று (பிப்., 10ல்) ராசிபுரத்தில் மலர் தொடுக்கும் பணி தொடங்கியது.
வித்யாமந்திர் பள்ளியில் காலை, 8:00 மணிக்கு மலர் தொடுக்கும் பணி தொடங்கியது. ஆத்தூர், வாழப்பாடி, சேலம், நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் மலர்களை மாலைகளாக கட்டினர். சாமந்தி, ரோஜா, மல்லிகை, துளசி, அரளி, மரிக்கொழுந்து, தாமரை, சம்பங்கி உள்ளிட்ட மலர்களை மாலைகளாக தொடுத்தனர். இதற்காக ஐந்து டன் மலர்கள் வாங்கி வரப்பட்டுள்ளன. இத்துடன், கரும்பு, தென்னம்பாளை,
தென்னங்குருத்து, பாக்கு குலைகள், இளநீர் குலைகள், கூந்தப்பனை, மாங்காய் கொத்துகளும் லாரி மூலம் திருப்பதிக்கு அனுப்பப்படுகின்றன. மாலைகளை, பள்ளி செயலாளர் சந்திர சேகரன் முன்னின்று அனுப்பி வைத்தார். இப்பொருட்கள் இன்று (பிப்., 11ல்)இரவு திருப்பதியில் சமர்ப்பிக்கப்படும்.